இம்மாதம் பிற்பாதியில் சிங்கப்பூரில் கூடுதல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலைச் சேவை தெரிவித்துள்ளது.
அதேவேளை, வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அன்றாட வெப்பநிலை 33 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும் என்றும் சில நாள்களில் இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் வானிலை முன்னுரைப்பை சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் புதன்கிழமை (செப்டம்பர் 16) வெளியிட்டது.
செப்டம்பர் மாத முற்பாதி நிலவரத்துடன் ஒப்பிட, பிற்பாதியில் கூடுதல் மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாள்களில் காலை பின்னேரத்துக்கும் பிற்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறைந்த நேரம் நீடிக்கும் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு நாள்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் பிற்பாதியில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பொழியவுள்ள மழையின் அளவு, நீண்டகாலத்துக்கான சராசரி அளவை எட்டக்கூடிய நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
