உறுதியற்ற சூழலிலும் வேலை மாற விருப்பம்

2 mins read
9df48037-2819-43d3-aec7-aeef7ce5deac
லிங்க்ட்இன் தரவுகளின்படி ஆய்வில் பங்கேற்ற 1,000 தொழில் வல்லுநர்களில் 86 விழுக்காட்டினர் 2024ஆம் ஆண்டில் புதிய வேலைக்கு மாற எண்ணம் கொண்டுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேம்பட்ட நீண்டகால வாய்ப்புகள், கூடுதல் சம்பளம், மேலும் சிறந்ததொரு வேலை-வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றுக்காக சிங்கப்பூரில் தொழில் நிபுணர்கள் பலர் வேலை மாறத் தயாராக உள்ளனர்.

ஊழியர் சந்தையில் வேலையின்மை விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன் நிச்சயமற்ற பொருளியல் நிலையும் நிலவுகிறது.

இருப்பினும், ‘லிங்க்டுஇன்’ என்ற நிபுணத்துவ நட்புவட்டத் தளம் ஜனவரி 17ஆம் தேதியன்று வெளியிட்ட தரவுகளின்படி 1,000 தொழில் வல்லுநர்களில் 86 விழுக்காட்டினர் 2024ஆம் ஆண்டு புதிய வேலைக்கு மாற எண்ணியிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

இந்த விகிதம் 2023ஆம் ஆண்டில் பதிவானதைக் காட்டிலும் 15% அதிகமாகும்.

2023ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டோர் பங்கேற்றனர்.

சவால்மிக்க பொருளியல் சூழலில் வேலை மாறுவதற்குக் கூடுதல் சம்பளமும் மேம்பட்ட வேலை-வாழ்க்கை சமநிலையும் முக்கிய உந்துதல்களாக இருப்பதாக ‘லிங்க்ட்இன்’ குறிப்பிட்டது.

“முடிந்தவரை ஒரு வேலையில் நீடிப்போம் என்ற எண்ணம் மாறிவிட்டது. தொழில் நிபுணர்கள் தங்களின் வாழ்க்கைத்தொழிலில் உரிமை எடுத்துக்கொண்டு உற்பத்தித்திறன் மீதும் வேலையில் வளர்ச்சி காண்பது மீதும் கவனம் செலுத்த விரும்புகிறார்கள்,” என்று தளம் சுட்டியது.

குறிப்பாக, ‘ஜென் ஸி’ ஊழியர்கள் அதாவது 18 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டோரும் ‘மில்லெனியல்ஸ்’, அதாவது 27 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டோரும் புது வேலை தேடும் ஆவல் கொண்டோரில் பெரும்பான்மையினராக இருந்தனர்.

மேலும், அடுத்த கட்டமாக வேறு தொழில்துறை அல்லது வேறு வேலைப் பொறுப்பை நாட விரும்புவதாக ஆய்வில் பங்கேற்ற சுமார் 70 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

இத்துடன் ‘வேகமாக வளர்ச்சி காணும் வேலைகள்’ என்ற பட்டியல் ஒன்றையும் தளம் வெளியிட்டது.

பட்டியலின் 15 வேலைகளில் தொழில்நுட்பத் துறை தொடர்பானவை எட்டு.

‘லிங்க்டுஇன்’ தளத்தை சிங்கப்பூரில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்