ரட்சண்ய சேனையின் கூடுதலான மலிவு விலைக் கடைகள்

2 mins read
4a0f7c40-bf9a-4d83-af58-e16f6507d253
ஜேடிசியின் டேஃபு தொழில்துறை நகரில் ரி:நியூவின் புதிய ஆலை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் மாதங்களில் ரட்சண்ய சேனையின் (The Salvation Army) கூடுதலான மலிவு விலைச் சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கப்படவுள்ளன.

ஃபார் ஈஸ்ட் கடைத்தொகுதியில் அமைந்துள்ள ரி:நியூ @ ஸ்காட்ஸ் (Re:Nue @ Scotts) வரும் ஜூலை மாதம் இரண்டாம் தேதி திறக்கப்படவுள்ளது. அக்கடையில் விலை மதிப்பு சற்று அதிகமாக இருக்கும் பொருள்கள் விற்கப்படும். கைக்கடிகாரங்கள், நகைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.

ரட்சண்ய சேனையின்கீழ் தற்போது நான்கு மலிவு விலைக் கடைகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அங் மோ கியோவில் திறக்கப்பட்ட ரி:நியூ @ அங் மோ கியோவும் அவற்றில் ஒன்று.

இதர மூன்று கடைகள் புக்கிட் தீமா, புக்கிட் மேரா, சாங்கி ஆகிய வட்டாரங்களில் அமைந்துள்ளன. அவற்றில் ஆடைகள், விளையாட்டுப் பொருள்கள், மின்சாரப் பொருள்கள், அறைகலன்கள் ஆகியவை விற்கப்படுகின்றன.

ரட்சண்ய சேனையின் மலிவு விலைச் சில்லறை விற்பனைக் கடை 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இது, சிங்கப்பூரில் உள்ள மலிவு விலைச் சில்லறை விற்பனைக் கடைகளில் ஆகப் பழைமையானவற்றில் ஒன்றாகும்.

அக்கடையின் பெயர் ரி:நியூ என்று மாற்றப்படும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு விளைவிக்கக்கூடாது என்ற போக்கு இளம் பயனீட்டாளர்களிடையே அதிகரித்துவருகிறது; அவர்களை ஈர்க்கும் நோக்கில் கடையின் பெயர் மாற்றப்படுகிறது என்று ரி:நியூ நிர்வாக இயக்குநர் கிறிஸ் மெக்பர்சன் தெரிவித்தார்.

ரி:நியூ, ஜேடிசியின் டேஃபு தொழில்துறை நகரில் பொருள்களைச் சரியாக அடையாளப்படுத்தி சேகரிக்க வகைசெய்யும் புதிய ஆலை ஒன்றுக்கும் செலவு செய்துள்ளது.

ரட்சண்ய சேனை கூடுதலான மலிவு விலைக் கடைகளைத் திறப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்ற போக்கு பலரிடையே அதிகரித்துவருவதைக் காட்டுவதாகத் திரு மெக்பர்சன் கூறினார். குறிப்பாக, 18லிருந்து 35 வயதுக்கு உட்பட்டோருக்கு இது பொருந்தும் என்றும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்