மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், சிங்கப்பூருக்கும் ஜெட்டாவுக்கும் இடையே வரும் மார்ச் 17ஆம் தேதிவரை கூடுதல் விமானச் சேவைகளை ரத்துசெய்துள்ளது, ஸ்கூட் விமான நிறுவனம்.
‘டிஆர்596’ ரக விமானச் சேவைகள் (சிங்கப்பூர் - ஜெட்டா), ‘டிஆர்597’ ரக விமானச் சேவைகள் (ஜெட்டா - சிங்கப்பூர்) ஆகியவை, மத்திய கிழக்கில் உள்ள புவி அரசியல் நிலைமையால் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) மலிவு விலை விமான நிறுவனமான ஸ்கூட் அதன் இணையத்தளத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தெரிவித்தது.
இதற்கு முன்னர், ஜெட்டாவுக்குச் செல்லும், அங்கிருந்து வரும் விமானச் சேவைகள் மார்ச் 10ஆம் தேதிவரை தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டிருக்கும் என்று ஸ்கூட் அறிவித்திருந்தது.
விமானச் சேவைகள் ரத்துசெய்யப்படுவதற்கு முன்பு, ஸ்கூட் விமான நிறுவனம், சிங்கப்பூருக்கும் ஜெட்டாவுக்கும் இடையே வாரத்திற்கு நான்கு விமானச் சேவைகளைச் செயல்படுத்தியது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதிக்கும் மார்ச் 7ஆம் தேதிக்கும் இடையே மொத்தம் 26 எஸ்ஐஏ, ஸ்கூட் விமானச் சேவைகள் ரத்தானதாக மார்ச் 1ஆம் தேதி அறிவிப்பு வந்திருந்தது.
அதன் பிறகு, மார்ச் 5ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘எஸ்கியூ494’ ரக விமானச் சேவைகள் (சிங்கப்பூர் - துபாய்), ‘எஸ்கியூ495’ ரக விமானச் சேவைகள் (துபாய் - சிங்கப்பூர்) ஆகியவை மார்ச் 15ஆம் தேதிவரை ரத்துசெய்யப்படும் என்று எஸ்ஐஏ கூறியிருந்தது.
“விமானச் சேவை ரத்துசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது பயணத்தைத் தொடர விரும்பவில்லை எனில், முழு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்குக் கோரிக்கை விடுக்கலாம். அல்லது அவர்கள் வேறு ஸ்கூட் விமானங்களில் மீண்டும் முன்பதிவுசெய்து பயணத்தைத் தொடரலாம்,” என்று எஸ்ஐஏ கூறியது.
பயண முகவர்கள் அல்லது பங்காளி விமான நிறுவனங்களுடன் முன்பதிவு செய்திருப்போர், உதவிக்காகச் சம்பந்தப்பட்ட தரப்பினரை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அது ஆலோசனை வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, பயணிகள் தங்கள் தொடர்பு விவரங்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் அல்லது விமானப் பயண நிலவரம் குறித்து தகவல் பெற கைப்பேசிச் சேவைக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்று எஸ்ஐஏ கேட்டுக்கொண்டது.

