சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளில் அரிக்கும் தோலழற்சி (eczema) பிரச்சினைக்கு ஆளானோரின் எண்ணிக்கையில் அதிக மாற்றம் காணப்படவில்லை.
சிறாரில் ஐந்தில் ஒருவரும் பெரியவர்களில் 10ல் ஒருவரும் அப்பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர். இருப்பினும், ஓரளவு மோசமான அல்லது மிக மோசமான அரிக்கும் தோலழற்சி பிரச்சினைக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிக்கும் தோலழற்சி மோசமாக இருந்தால் தோலிலிருந்து ரத்தம் கசிவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
ஓரளவு மோசமான அல்லது மிக மோசமான ‘எட்டோப்பிக் எக்ஸீமா’ (atopic eczema) பிரச்சினைக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கூடியிருப்பதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனையும் தேசிய தோல் நிலையமும் தெரிவித்துள்ளன. எனினும், இதன் தொடர்பில் அண்மையில் எந்த ஆய்வும் நடத்தப்படாததால் குறிப்பிட்ட எண்ணிக்கை சம்பந்தப்பட்ட விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.
‘எட்டோப்பிக் எக்ஸீமா’தான் பொதுவாகப் பலரிடையே காணப்படும் அரிக்கும் தோலழற்சி பிரச்சினை. இது பிறக்கும்போதே ஒருவருக்கு இருக்காது. பொதுவாக பிறந்து சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகுதான் தலைதூக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகே மருத்துவமனை, தினமும் புதிதாக ‘எட்டோப்பிக் எக்ஸீமா’க்கு ஆளாகும் 20 பேரைக் கையாள்கிறது. அவர்களில் கூடுதலான சிறார் ஓரளவு மோசமான அல்லது மிக மோசமான அரிக்கும் தோலழற்சி பிரச்சினையால் பாதிக்கப்படுவதை அம்மருத்துவமனை கவனித்திருக்கிறது.
அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டோரில் 20லிருந்து 30 விழுக்காட்டினர் சிறார் என்று கேகே மருத்துவமனையின் தோல் மருத்துவப் பிரிவுத் தலைவரும் மூத்த மருத்துவருமான மார்க் கோ தெரிவித்தார்.
தேசிய தோல் நிலையத்தை நாடும் அரிக்கும் தோலழற்சி நோயாளிகளின் எண்ணிக்கையில் பொதுவாக மாற்றம் அதிகம் இல்லை. அதேவேளை, அங்கு செல்லும் ஓரளவு மோசமான அல்லது மிக மோசமான அரிக்கும் தோலழற்சி பிரச்சினைக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக்கூடும். தேசிய தோல் நிலையத்தின் அரிக்கும் தோலழற்சி மருந்தகத்தை வழிநடத்தும் மூத்த தோல் மருத்துவர் இயூ யிக் வெங் இத்தகவலை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில் புதிதாக அரிக்கும் தோலழற்சி பிரச்சினைக்கு ஆளான 14,000க்கும் அதிகமானோருக்கு தேசிய தோல் நிலையம் சிகிச்சை அளித்தது.

