சிங்கப்பூரின் வர்த்தகச் சூழல் குறித்த நம்பிக்கை குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
நிலையற்ற பொருளியல் சூழல் தொடரும் வேளையில் வர்த்தக நிலவரம் இவ்வாறு இருப்பதாக சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 28) வெளியிடப்பட்டன.
அடுத்த 12 மாத காலத்தில் பொருளியல் மோசமடையும் என்று எண்ணும் வர்த்தகங்களின் எண்ணிக்கை காலாண்டு அடிப்படையில் கிட்டத்தட்ட இரு மடங்கானது.
சென்ற ஆண்டு கடைசி காலாண்டில் இந்த விகிதம் 22 விழுக்காடாகப் பதிவானது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் விகிதம் 40 விழுக்காட்டுக்கு அதிகரித்தது இவ்வாண்டுக்கான தேசிய வர்த்தகக் கருத்தாய்வின் (என்பிஎஸ்) முடிவுகளில் தெரியவந்துள்ளது.
ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தற்காலிகத் தங்குமிடத் துறை, சுகாதாரத் துறை, சமூக சேவைத் துறை ஆகியவற்றில் அதிகமான நிறுவனங்கள், அடுத்த 12 மாதங்களுக்கான பொருளியல் நிலவரம் குறித்து அதிக நம்பிக்கை இல்லாமல் இருப்பதாக சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் தெரிவித்தது.
குறிப்பாக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தற்காலிகத் தங்குமிடத் துறையில்தான் நம்பிக்கை ஆகக் குறைவாகப் பதிவானது. அத்துறையில் வர்த்தக நம்பிக்கையைக் கணக்கிடும் புதிய பிஎஸ்ஐ குறியீடு 52.2ஆகப் பதிவானது. அந்த விகிதம், ஒட்டுமொத்தமாகப் பதிவான 56.5%ஐக் காட்டிலும் குறைவாகும்.