சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர் மகிழ்ச்சியான கற்றல் சூழல், சமூக-உணர்வு வளர்ச்சி, பிள்ளைகள் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளிட்டவற்றை வழங்கும் முழுமையான கல்வி அணுகுமுறையை வரவேற்கின்றனர். ஆனால் அதே வேளையில், துணைப்பாட, செறிவூட்டல் வகுப்புகளுக்கான செலவுகளையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
கொள்கை ஆய்வுக் கழகம் (ஐபிஎஸ்) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்ட ‘சிங்கப்பூரில் பெற்றோரும் பள்ளிக் கல்வியும்’ எனும் புதிய ஆய்வு அறிக்கை இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
கல்வி தொடர்பான குடும்ப மன உளைச்சலும் கணவன்-மனைவி இடையிலான பிணக்குகளும் தற்போதைய சூழலில் அதிகரித்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆய்வின் பின்னணி
ஐபிஎஸ் சமூக ஆய்வுக்கூட ஆய்வாளர்களான முனைவர் மேத்யூ மேத்யூஸ், முனைவர் மெல்வின் டே, முனைவர் தியோ கே கீ ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். உள்ளூர்த் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோர் 1,500 பேரிடம் இக்கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவர்கள் சிங்கப்பூர்க் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் எனத் தெரிவிக்கப்பட்டது.
2016ல் நடத்தப்பட்ட இதேபோன்ற கருத்தாய்வு முக்கியமாகத் தொடக்கப்பள்ளி அனுபவத்திலேயே கவனம் செலுத்திய நிலையில், 2026ன் ஆய்வு அதன் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது.
பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கான அடுத்தகட்ட உயர்நிலைப் பள்ளித் தெரிவுகள், மாற்றுச் சேர்க்கை வழிகள், பரந்த கல்விக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை அது ஆராய்ந்துள்ளது.
அதிகரிக்கும் துணைப்பாடச் செலவுகள்
கல்வி தொடர்பான நிதி முதலீடுகளில்தான் பெற்றோரின் முரண்பட்ட நிலைப்பாடு மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது. சராசரி மாதாந்தர துணைப்பாட வகுப்புச் செலவு 2016ல் $318ஆக இருந்த நிலையில், 2026ல் இரட்டிப்புக்கும் மேலாக உயர்ந்து $677ஆகப் பதிவானது. அதேவேளையில் செறிவூட்டல் வகுப்புகளுக்கான செலவு $125லிருந்து $355ஆக அதிகரித்துள்ளது.
பிள்ளைகள் துணைப்பாட வகுப்புகளிலும் செறிவூட்டல் வகுப்புகளிலும் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதை 89.8 விழுக்காட்டுப் பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், போதிய வசதிகள் இருந்தால் தங்களில் பத்தில் ஏழு பேர் இன்னும் கூடுதலாகச் செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். இதில் சக பெற்றோரால் ஏற்படும் அழுத்தமும் (51.9 விழுக்காடு) ஒரு காரணியாக அமைந்துள்ளது.
மாறும் அணுகுமுறை, குறையாத மன அழுத்தம்
பெற்றோர் அதிக முற்போக்கான எண்ணங்களை ஏற்றுக்கொண்டபோதிலும், இந்தக் கல்விப் போட்டியின் அதிதீவிரம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகள் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதிப்பதை பெற்றோர் இன்று அதிகம் வரவேற்கின்றனர் (2016ல் 62.2 விழுக்காடாக இருந்த இவ்விகிதம் 2026ல் 79 விழுக்காடாக உயர்ந்துள்ளது). மோசமான தேர்வு முடிவுகளுக்காகப் பிள்ளைகளைக் கண்டிக்கும் போக்கு குறைந்துள்ளது (66.7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாகச் சரிந்துள்ளது).
இருப்பினும், தங்களது பிள்ளைகளின் கல்வி குறித்து மன உளைச்சலை உணர்வதாகத் தெரிவித்த பெற்றோரின் விகிதம் 73.1 விழுக்காட்டிலிருந்து 87.9 விழுக்காடாக உயர்ந்தது. இவ்விவகாரத்தில் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதாகக் கூறியோரின் விகிதம் 42.8 விழுக்காட்டிலிருந்து 59.7 விழுக்காடாக அதிகரித்தது.
இந்த மன அழுத்தத்தின் இயல்பு, அன்றாடப் பள்ளிப் பாடங்களிலிருந்து மாறி, பிள்ளைகள் பின்தங்கிவிடுவார்கள் அல்லது தங்களின் முழுத் திறனை அடையத் தவறிவிடுவார்கள் என்ற நீண்டகால அடிப்படையிலான கவலைகளை நோக்கிக் குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது.
பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதில் புதிய அளவுகோல்
மாறிவரும் இந்த மனப்போக்கு, பெற்றோர் தொடக்கப்பள்ளிகளை மதிப்பிடும் விதத்திலும் தெளிவாகப் புலப்படுகிறது. மாணவர்களின் சமூக-உணர்வு வளர்ச்சியில் அக்கறை காட்டும் ஆசிரியர்களே பெற்றோர் மதிக்கும் முதன்மை அம்சமாகத் திகழ்கின்றனர். மாறாக, போட்டித்தன்மை கொண்ட பள்ளிச் சூழலுக்கான ஈர்ப்பு 19.9 விழுக்காட்டுப் புள்ளிகளும், முன்னாள் மாணவர் அமைப்புகளின் முக்கியத்துவம் 14.2 விழுக்காட்டுப் புள்ளிகளும் சரிவடைந்துள்ளன.
கல்வி முறை மீதான மாறாத நம்பிக்கை
இத்தகைய சவால்களையும் மாறுபட்ட முன்னுரிமைகளையும் எதிர்கொண்டபோதிலும், கல்வி முறை மீதான பெற்றோரின் நம்பிக்கை குறையவில்லை. 90.2 விழுக்காட்டினர் சிங்கப்பூரின் கல்வி முறையை உலகின் மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகத் தொடர்ந்து மதிப்பிடுகின்றனர்.
“பிள்ளைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் எதிர்காலப் படிப்பிற்கும் இடையே பெற்றோர் எதையும் சமரசம் செய்யத் தேவையில்லாத சூழலை உருவாக்க வேண்டும். அதேநேரம், இந்த இரண்டு இலக்குகளையும் அவர்கள் சரியாகக் கையாள உதவுவதே நமது முதன்மைச் சவாலாகும்,” என்று முனைவர் மேத்யூ மேத்யூஸ் தெரிவித்தார்.
