ஆய்வு: இன, சமய விவகாரங்களில் அரசாங்கம் ஈடுபட கூடுதலானோர் விருப்பம்

3 mins read
6716982a-646d-42fe-952b-4f2c9403819c
2024ல் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் 4,000 பேர் பங்கேற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இனம், சமயம் சார்ந்த விவகாரங்களை நிர்வகிப்பதில் அரசாங்கம் மேலும் ஈடுபடுவதற்குத் தேவை இருப்பதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பைவிட கூடுதலான சிங்கப்பூர்வாசிகள் கருதுகின்றனர்.

இதற்கு நேர்மாறாக புலம்பெயர்வு, சமுதாய-பொருளியல் தகுதிநிலை ஏற்றத்தாழ்வு, தன்பாலின ஈர்ப்பு ஆகிய விவகாரங்களில் அதிக அரசாங்க ஈடுபாடு தேவை என்று பிப்ரவரி 4ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட கொள்கை ஆய்வுக் கழகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

2024ல் நடத்தப்பட்ட கொள்கை ஆய்வுக் கழக கருத்தாய்வின்படி, இன விவகாரங்களில் அரசாங்கம் தனது ஈடுபாட்டை அதிகரிக்கவேண்டும் என்று கருத்தாய்வுக்கு விடையளித்தோரில் 30.5 விழுக்காட்டினர் கூறினர். 2018ல் இந்த விழுக்காடு 27.3ஆக இருந்தது.

சமய விவகாரங்களைப் பொறுத்தவரை, அரசாங்க ஈடுபாடு அதிகமாக தேவைப்படுவதாக 28.4 விழுக்காட்டினர் கருதுகின்றனர். இவ்விகிதம், 2018ல் 23.2 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.

இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ள நேரத்தில் சிங்கப்பூரின் சமுதாயப் பிளவுகளைப் பற்றிய பொதுமக்கள் கண்ணோட்டத்தை விவரிக்கும் கொள்கை ஆய்வுக் கழக அறிக்கை வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நடத்தப்பட்ட கொள்கை ஆய்வுக் கழகம், 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர்ச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் 4,000 சிங்கப்பூர் குடிமக்களிடம் கருத்தாய்வை மேற்கொண்டது.

இதுபோல 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த தரவுகளின் மேம்பாடாக தற்போது தொகுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் விளங்குகின்றன. இனம், சமயம், குடிநுழைவு, சமூக-பொருளியல் தகுதிநிலை, தன்பாலின ஈர்ப்பு ஆகிய ஐந்து விவகாரங்கள் குறித்த பொதுமக்களின் உணர்வை இந்தக் கருத்தாய்வு விவரிக்கிறது.

இன விவகாரங்களின் நிர்வாகத்தில் அரசாங்கம் ஈடுபடும் அளவு போதுமானது என்று 2024ல் 63.3 விழுக்காட்டினரும் 2018ல் 65.7 விழுக்காட்டினரும் கூறியிருந்தனர்.

இந்த ஈடுபாட்டினை அரசாங்கம் குறைக்கவேண்டும் என்று 2024ல் 6.2 விழுக்காட்டினரும் 2018ல் 7 விழுக்காட்டினரும் விரும்புவதாகப் பதிவாகியிருந்தது.

இதுபோலவே சமய விவகாரங்களைப் பொறுத்தவரையில், 2024ல் 64.8 விழுக்காட்டினரும் 2018ல் 67.8 விழுக்காட்டினரும் அரசாங்கம் தற்போது எந்த அளவுக்கு ஈடுபாடு காட்டுகிறேதோ அதே அளவில் தொடர வேண்டுமென விரும்புகின்றனர்.

இன விவகாரங்களில் அரசாங்கம் காட்டும் ஈடுபாடு தற்போதிருக்கும் ஈடுபாடு அதே அளவில் இருக்கவேண்டும் என்று கருத்தாய்வில் சீன இனத்தவர் 66.8 விழுக்காட்டினரும், மலாய்க்காரர்கள் 51.4 விழுக்காட்டினரும், இந்தியர்கள் 51.2 விழுக்காட்டினரும், பிற இனத்தவர்கள் 52.9 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.

இன விவகாரங்களில் அரசாங்கம் காட்டும் ஈடுபாடு அதே அளவில் நீடிக்கவேண்டும் என்று முதியோரும் அதிக வருமானம் ஈட்டுவோரும் சொல்லும் சாத்தியம் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

2024ல் கருத்தாய்வில் பதிவான ஐந்து விவகாரங்களில் இன, சமய விவகாரங்கள் முறையாக நிர்வகிக்கப்படாமல் இருந்தால், குறிப்பிட்ட சில சமூகங்கள் மீது சினமும் வன்முறையும் ஏற்படக்கூடும் என்று நினைப்போரின் விகிதம் ஆக அதிகம்.

சமூக-பொருளியல் தகுதிநிலை ஏற்றத்தாழ்வு, புலம்பெயர்வு, தன்பாலின ஈர்ப்பு ஆகிய விவகாரங்களின் நிர்வாகம் குறித்து பெரும்பாலானோர், அரசாங்கம் தற்போது காட்டும் ஈடுபாட்டின் அளவு மீது 2018ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் அதிகமானோர் மனநிறைவுடன் இருப்பதாகப் பதிவாகியுள்ளது.

சமூக-பொருளியல் தகுதிநிலை ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்தவரை, அரசாங்கம் போதிய அளவு ஈடுபாடு காட்டுவதாக 2024ல் 56.4 விழுக்காட்டினரும் 2018ல் 48.7 விழுக்காட்டினரும் தெரிவித்தனர்.

2024ல் குடிநுழைவு விவகாரங்களில் தற்போதைய அரசாங்கத்தின் ஈடுபாடு காட்டும் அளவு மனநிறைவு தரும்படி இருப்பதாக 55.4 விழுக்காட்டினர் கருதுகின்றனர். இந்த விழுக்காடு 2018ல் 45.7ஆக இருந்தது.

தன்பாலின ஈர்ப்பு விவகாரங்களில் அரசாங்கம் காட்டும் ஈடுபாடு போதுமானது என்று 2024ல் 49.9 விழுக்காட்டினரும் 2018ல் 42.9 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில் இன, சமய விவகாரங்கள் நிறைவு அளிக்கும் வகையில் கையாளப்பட்டு வருவதாக ஆய்வில் கலந்துகொண்டோரில் முக்கால் பங்கிற்கும் அதிகமானோர் கூறியுள்ளனர். இதன் தொடர்பில் 56.1 விழுக்காட்டினர் மனநிறைவுடன் இருப்பதாகவும் 20.6 விழுக்காட்டினர் மிகுந்த மனநிறைவுடன் இருப்பதாகவும் பதிலளித்தனர்.

இன, சமய விவகாரங்களை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து சீனர்கள், தாவோயிஸ்ட்டுகள், முதியோர், கல்விநிலை குறைவாக இருப்போர், அதிக வருமானோர் ஈட்டுவோர் ஆகியோர் மிகுந்த மனநிறைவை உணர்வதாகக் கூறுகின்றனர்.

இனம் அடிப்படையிலான கொள்கை குறித்த 2024 கருத்தாய்வின்படி, சீனர் - மலாய்க்காரர் - இந்தியர் - மற்றவர்கள் என அரசாங்கம் மக்களை வகுக்கும் முறை அகற்றப்படவேண்டும் என்று 5.9 விழுக்காட்டினர் விரும்புகின்றனர். ஆயினும், அந்த முறை அப்படியே தொடரவேண்டும் என்று 44.9 விழுக்காட்டினர் கூறியதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 24.8 விழுக்காட்டினர் கூடுதல் இனப்பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் 1.6 விழுக்காட்டினர் இனப்பிரிவுகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்