சிங்கப்பூரர்கள் தங்கள் ஓய்வுக்கால நிதியை அதிகரிக்க மத்திய சேமநிதியில் கூடுதல் பணத்தை நிரப்புவதாக 2024 ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு 55 வயதை எட்டிய உறுப்பினர்கள் 2023ஆம் ஆண்டே தேவைப்படும் ஓய்வுக்காலத் தொகையை ஒதுக்கிவிட்டனர்.
இதற்கிடையே, ஓய்வுக்கால வழங்குதொகை கடந்த ஆண்டு $4 பில்லியனுக்கு மேல் இருந்தது. அதோடு 55 வயதை எட்டியோர் தங்கள் கணக்கிலிருந்து எடுத்த உபரி சேமிப்பும் கூடியது.
கடந்த ஆண்டு ஏறக்குறைய 39,000 மத்திய சேமநிதி உறுப்பினர்கள் 55 வயதை எட்டினர். அவர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் தேவைப்படும் ஓய்வுக்காலத் தொகையை ஒதுக்கிவைத்தனர். 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 67.6 விழுக்காடு அதிகம்.
அவர்கள் முழு ஓய்வுக்காலத் தொகையை மத்திய சேமநிதி சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தனர் அல்லது குறைந்தபட்சம் அடிப்படை ஓய்வுக்காலத் தொகையுடன் ஒரு சொத்தையும் வைத்திருந்தனர்.
மத்திய சேமநிதி லைஃப் திட்டத்தில் இணைய ஓய்வுக்காலத் தொகை பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் 65 வயதிலிருந்து 70 வயதுக்கு உட்பட்ட உறுப்பினர்கள் மாதாந்தர வழங்குதொகையைப் பெறுவர்.
மத்திய சேமநிதி ஆண்டறிக்கை, கடந்த ஆண்டு $4.4 பில்லியன் உறுப்பினர்களுக்கு வழங்குதொகையாகக் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டது. அது 2023ஆம் ஆண்டைவிட 29.4 விழுக்காடு அதிகம். அந்த ஆண்டு கிட்டத்தட்ட $3.4 பில்லியன் வழங்குதொகை அளிக்கப்பட்டது.
வழங்குதொகைக்குத் தகுதிபெற்ற 588,000 உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய $624 சராசரியாகக் கொடுக்கப்பட்டது. 2023ல் அது $552ஆகவும் 2022ல் $532ஆகவும் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒருசில மத்திய சேமநிதி உறுப்பினர்கள் ஒரு சொத்தையாவது வைத்திருந்ததால் அடிப்படை ஓய்வுக்காலத் தொகைக்குத் தேவையான தொகையை மட்டும் நிரப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அத்தகையோரின் வழங்குதொகையும் குறைவு.
மொத்த ஓய்வுக்காலத் தொகையை நிரப்பிய உறுப்பினர்கள் உபரி சேமிப்பைச் சாதாரணக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்ய இயலாதோர் $5,000 வரை எடுக்கலாம்.
அதை ஒரே நேரத்தில் எடுக்காமல் தேவை ஏற்படும்போது பலமுறை எடுத்துக்கொள்ள முடியும்.
அவ்வாறு கடந்த ஆண்டு $8.4 பில்லியன் எடுக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டைவிட அது 3.7 விழுக்காடு அதிகம். அந்த ஆண்டு கிட்டத்தட்ட $8.1 பில்லியன் தொகை எடுக்கப்பட்டது.