ஓய்வுக்கால, சுகாதாரப் பராமரிப்பு சேமிப்புகளை அதிகரிக்கும் திட்டங்களுக்கு அதிகமான சிங்கப்பூரர்கள் தகுதிபெற உள்ளனர்.
வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான ஓய்வுக்காலச் சேமிப்புத் திட்டம், வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான மெடிசேவ் இணை நிதித் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களில் தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் நிரப்பும் தொகைக்கு நிகரான தொகையை அரசாங்கமும் நிரப்பும்.
இத்திட்டங்களில் வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான ஓய்வுக்காலச் சேமிப்புத் திட்டம் விரிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு ஏறத்தாழ 750,000 சிங்கப்பூரர்கள் அதற்குத் தகுதிபெறுவர்.
சுகாதார அமைச்சு, மனிதவள அமைச்சு, மத்திய சேமநிதிக் கழகம் ஆகிய மூன்றும் இணைந்து திங்கட்கிழமை (ஜனவரி 26) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
தகுதியுள்ள சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால, சுகாதாரப் பராமரிப்பு சேமிப்புகளை அதிகரிக்கும் வகையில் திட்டம் விரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களின் பலனைப் பெற 2025ஆம் ஆண்டு 250,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களும் அதற்கு முந்திய 2024ஆம் ஆண்டு 103,000 சிங்கப்பூரர்களும் தகுதிபெற்று இருந்தனர்.
ஓய்வுக்காலக் கணக்கில் குறைவான தொகையை வைத்துள்ள மூத்த சிங்கப்பூரர்கள், அந்தக் கணக்கில் ரொக்கத்தை நிரப்பும்போது அதற்கு இணையான தொகையை அவர்களின் கணக்கில் நிரப்ப அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கும் திட்டம் 2021ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு அந்தத் திட்டம் சில மாற்றங்களுடன் மேம்பாடு கண்டது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்தின் இணை நிதி மானியத்தைப் பெறுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 70 என்பது நீக்கப்பட்டது.
அதேபோல, ஆண்டு ஒன்றுக்கு அரசாங்கம் அளிக்கும் இணை நிதி மானியத்தின் அளவு $2,000க்கு உயர்த்தப்பட்டது.
மேலும், தகுதியுள்ள மத்திய சேம நிதி உறுப்பினர்களின் ஆயுட்கால இணை நிதி மானியத்தின் உச்சவரம்பு $20,000 என நிர்ணயிக்கப்பட்டது.

