கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வில் தகவல்

தாய்மொழியை முக்கிய அடையாளமாகக் கருதுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
07fe823f-e08f-4000-a981-75d2c335f182
தாய்மொழி தங்கள் அடையாளத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்களிடையே தாய்மொழியை முக்கியமாக கருதுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கொள்கை ஆய்வுக் கழகம் கடந்த ஆண்டு நடத்திய கருத்தாய்வில், ஐம்பதுக்கும் சற்று குறைவான விழுக்காட்டினர் ஒட்டுமொத்த அடையாளத்தில் தங்கள் தாய்மொழி முக்கிய அங்கம் வகிப்பதைச் சுட்டினர்.

2013ஆம் ஆண்டு அவ்வாறு 44.3 விழுக்காட்டினர் கருதினர். அந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 41 விழுக்காட்டிற்குச் சரிந்தது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஆக அதிகமாக 47.6 விழுக்காட்டினர் தாய்மொழி முக்கியம் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டனர்.

அதேவேளையில், ஒட்டுமொத்த அடையாளத்தில் தாய்மொழிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதில்லை என்போர் விகிதம் கடந்த ஆண்டு கணிசமாகக் குறைந்தது.

2018ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 13.2 விழுக்காட்டினர் தாய்மொழி முக்கியம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தனர். அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 9.7 விழுக்காடாகக் குறைந்தது.

சிறுபான்மையினர் இனம், அதிகாரத்துவ தாய்மொழி, அதிகம் பயன்படுத்தும் மொழி, சிங்கப்பூர் ஆகியவை தங்கள் ஒட்டுமொத்த அடையாளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர் என்று ஆய்வு சுட்டியது.

சீனர்களில் 19.1 விழுக்காட்டினரும், மலாய்க்காரர்களில் 37.6 விழுக்காட்டினரும், இந்தியர்களில் 30.4 விழுக்காட்டினரும் இனம் தங்கள் அடையாளத்தில் முக்கிய அங்கம் வகிப்பதாகக் குறிப்பிட்டனர். மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களில் 32.4 விழுக்காட்டினர் இன அடையாளம் முக்கியம் என்றனர்.

தாய்மொழியைப் பொறுத்தவரை, இந்தியர்களில் அதிகமானோர் தங்கள் அடையாளத்தில் அது முக்கிய அங்கம் வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏறக்குறைய 36.3 விழுக்காட்டு இந்தியர்கள் தாய்மொழி தங்கள் அடையாளத்தில் முக்கியம் என்றனர். மலாய்க்காரர்களில் 34.9 விழுக்காட்டினரும் சீனர்களில் 18.7 விழுக்காட்டினரும் அவ்வாறு கூறினர்.

சிங்கப்பூரர்களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர், அடிக்கடி பயன்படுத்தும் மொழியும் தங்கள் அடையாளத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தனர்.

ஐந்தாண்டுகளுக்குமுன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுடன் ஒப்புநோக்க, அந்த விகிதமும் அதிகரித்துள்ளது.

2013ஆம் ஆண்டு 48.4 விழுக்காட்டினர் தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் மொழி முக்கிய அடையாளம் என்றனர். அந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 47.2 விழுக்காட்டுக்குச் சரிந்து, கடந்த ஆண்டு ஆக அதிகமாக 53.1 விழுக்காட்டுக்கு உயர்ந்தது.

தாய்மொழி, பயன்பாட்டு மொழி ஆகியவற்றைக் கடந்து சிங்கப்பூர் எந்த அளவு தங்கள் ஒட்டுமொத்த அடையாளத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்று பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது.

சிங்கப்பூர் முக்கியம் அல்லது மிகவும் முக்கியம் என்று கூறியவர்களின் எண்ணிக்கை 86.4 விழுக்காடு. 2018ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 83.8 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்