கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வில் தகவல்

அதிகமான சிங்கப்பூரர்கள் சமயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பு

2 mins read
6382763a-8382-42a9-b181-41ef51e08503
கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் நால்வரில் மூவர் சமயமும் ஆன்மிகமும் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய அங்கம் வகிப்பதாகக் குறிப்பிட்டனர். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரர்களில் அதிகமானோர் சமயத்தைத் தங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுவதாகப் புதிய ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

பல அம்சங்கள் தொடர்பான தங்கள் கண்ணோட்டங்கள்மீதும் சமய நம்பிக்கை தாக்கத்தை ஏற்படுத்துவதாகப் பெரும்பாலார் குறிப்பிட்டனர்.

கொள்கை ஆய்வுக் கழகம் கடந்த ஆண்டு நடத்திய ‘சிங்கப்பூரர்களிடையே சமய அடையாளமும் பழக்கங்களும்’ என்ற ஆய்வில் கிட்டத்தட்ட 4,000 பேர் பங்கேற்றனர்.

அவர்களில் நால்வரில் மூவர், சமயமும் ஆன்மிகமும் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய அங்கம் வகிப்பதாகவும் வேலையிடத்திலும் தொழில் நடைமுறைகளிலும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதை அவற்றைக் கொண்டு முடிவுசெய்வதாகவும் குறிப்பிட்டனர்.

இதற்குமுன் 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இதுபோன்ற ஆய்வுடன் ஒப்புநோக்க, அவ்விகிதம் அதிகரித்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றோரில் 73.9 விழுக்காட்டினர் வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்களுக்குத் தங்கள் சமய நம்பிக்கைதான் அர்த்தம் கொடுப்பதாகக் குறிப்பிட்டனர்.

கிட்டத்தட்ட 68.3 விழுக்காட்டினர் முடிவெடுக்கும் கட்டத்தை எதிர்கொள்ளும்போது தாங்கள் வழிபடும் இறைவனிடமோ தங்கள் சமயத்திடமோ சிறந்த முடிவைத் தெரிவுசெய்வதற்கான வழியைக் கண்டறிய முற்படுகின்றனர்.

ஆன்மிகம் இல்லாமல் அன்றாட வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கும் என்று 60 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

சமயத்துடன் தொடர்புடைய சிங்கப்பூரர்கள் மத்தியில், சமயத்துடனும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதை ஆய்வு முடிவுகள் குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சமய அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளிப்போர் அதிகரிப்பதால், கொள்கைகளை வகுக்கும்போது தங்கள் நம்பிக்கைகளைக் கருத்தில்கொள்ளும்படி சமயக் குழுக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே, சமூகப் பிணைப்பை வலுப்படுத்த சமய அமைப்புகளுடன் தொடர்ந்து கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தை ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.

ஆய்வில் பங்கெடுத்தோரில் குறிப்பிடத்தக்க விகிதத்தினர், பல்வேறு விவகாரங்களுக்கு வழிகாட்டும்படி சமய அமைப்புகளை நாடுகின்றனர்.

எனவே, சமயத் தலைவர்களும் அமைப்புகளும் ஆக்ககரமான வழக்கத்தை வலியுறுத்த முக்கியப் பங்காளிகளாகச் செயல்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து ஆகஸ்ட் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஏறக்குறைய 350 கேள்விகள் இருந்தன.

அடையாளக் குறியீடுகள் குறித்தும், பல்லினச் சமூகத்திலும் பலதரப்பட்ட கொள்கை விவகாரங்களுக்கு மத்தியில் ஏற்படும் அன்றாட அனுபவங்கள் குறித்தும் கேட்கப்பட்டன.

“அனைத்து ஆய்விலும் பங்கேற்பாளர்களின் குறிப்பிட்ட அடையாளங்களில் ஆக முக்கியமானது தேசிய அடையாளம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். பல வயதினருக்கு இடையே சிங்கப்பூரின் அடையாளம் ஆக முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது,” என்று ஆய்வு சுட்டியது.

இனம், சமயம், தேசியம், பாலினம், பிறந்த நாடு, வயது, வேலை, கல்விப் பின்னணி ஆகியவற்றை வரிசைப்படுத்தும்படி பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதில் 35.9 விழுக்காட்டினர் தேசியத்தை முதல் பதிலாகப் பதிவிட்டனர். அதையடுத்து, 20.6 விழுக்காட்டினர் இனத்தையும் 16.1 விழுக்காட்டினர் சமயத்தையும் குறிப்பிட்டனர்.

பங்கேற்பாளர்களின் குடும்பப் பூர்வீகம் கடைசி இடத்தைப் பிடித்தது.

இதர சமயத்தினரைவிட முஸ்லிம்கள் தங்கள் சமயத்தைத் தங்கள் அடையாளத்தின் முக்கிய அம்சமாகக் கருதுவது ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

சமயப் பழக்கங்களைப் பொறுத்தவரை, மூவரில் ஒருவர் கூடுமானவரை அவற்றைத் தூய்மையாகவும் மரபு மாறாமலும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்