பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகள் கற்க அதிக ஆர்வம்

2 mins read
401298c6-a0b9-4338-b3bc-d4510c3a34e1
கல்வியமைச்சின் பாடப் பிரிவு அடிப்படையிலான முன்னோடித் திட்டம் மகிழ்ச்சியளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 500 மாணவர்கள் அதில் இணைந்துள்ளனர். - படம்: கெய்ட்லின் சான்

கல்வியமைச்சு அறிமுகம் செய்த பாடப் பிரிவு அடிப்படையிலான மூன்றாம் மொழித் திட்டம் மாணவர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அந்த முன்னோட்டத் திட்டத்தில் 21 உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து சுமார் 500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

திட்டத்தின்கீழ் பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளை மாணவர்கள் கற்பர்.

திட்டம் ஏறத்தாழ 120 மாணவர்களுடன் 2023ஆம் ஆண்டு தொடங்கியது.

ஏற்கெனவே நடப்பில் உள்ள மூன்றாம் மொழி திட்டத்தின்கீழ் மாணவர்கள் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலை அல்லது மேல்நிலை பாடமாக மூன்றாம் மொழியைப் பயில்கின்றனர்.

புதிதாக அறிமுகம் கண்ட பாடப் பிரிவின் அடிப்படையிலான மூன்றாம் மொழித் திட்டம் சற்று மாறுபட்டது.

மாணவர்கள் தங்கள் கல்விப் பருவத்துக்கு ஏற்ப மூன்றாம் மொழியைக் கற்பதை நிறுத்திவைத்து பின் மீண்டும் தொடர புதிய திட்டம் வழியமைக்கிறது.

ஒவ்வொரு பாடப் பிரிவும் 8 வாரங்கள் நீடிக்கும்.

மாணவர்கள் திறனுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற எண்ணிக்கையில் பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

பிரெஞ்சு வகுப்புகள் அல்லையன்ஸ் பிரான்சேஸ் டெ சிங்கப்பூர் (Alliance Francaise de Singapour) என்ற இடத்திலும் ஜெர்மானிய வகுப்புகள் கோட்ட இன்ஸ்டிடியுட் சிங்கப்பூர் (Goethe-Institut Singapore) ஆகிய இடங்களிலும் நடைபெறுகின்றன.

முன்னோடித் திட்டம் குறித்த மாணவர்களின் கருத்து ஊக்கமளிப்பதாய் கல்வியமைச்சு சொன்னது.

திட்டத்தைக் கூடுதல் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தவும் கூடுதல் மொழிகளைத் திட்டத்தில் சேர்க்கவும் அமைச்சு ஆராயவிருக்கிறது.

இவ்வாண்டு வியட்நாமிய மொழியில் உரையாடுவதைச் சுயமாகக் கற்றுக்கொள்வதற்கான மின்னிலக்கத் திட்டங்களை கல்வியமைச்சு அறிமுகம் செய்யவிருக்கிறது.

தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்கள் அந்தத் திட்டங்களை சிங்கப்பூர் மாணவர் கற்றல் தளங்களில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்