உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த கூடுதல் மாணவர்கள் நிபந்தனையற்ற உபகாரச் சம்பளத்தின் மூலம் பயனடையவிருக்கின்றனர். தலைமைத்துவப் பயிற்சிகளும் வேலைத் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தொடக்கநிலை விருதுத் திட்டம், 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 135 மாணவர்கள் பலனடைந்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான சேர்க்கையில் பங்கேற்கும் தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 150 மாணவர்களுக்குத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இத்திட்டத்தின் ஒன்பதாவது கல்வி நிலையமாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
உபகாரச் சம்பள விருதுகளைப் பெறுவோர், தனிப்பட்ட முறையில் நான்கு மாத வழிகாட்டித் திட்டத்தில் பங்கேற்கலாம்; தொழில்துறையில் அனுபவம் பெற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம்; எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் பற்றி ஆராயும் சமூகத் திட்டங்களை வழிநடத்தலாம்.
இத்திட்டம் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கு $6,000 வரையிலும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு $9,000 வரையிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு $16,000 வரையிலும் வழங்குகிறது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) முதல் இவ்வாண்டு அக்டோபர் 25 வரை திறந்திருக்கும்.
கூடுதல் விவரங்களைப் பெற https://youth.ntuc.org.sg/ntuc-starter-awards எனும் இணையதளத்திற்குச் செல்லலாம்.
புதன்கிழமை டௌன்டவுன் ஈஸ்ட்டில் உள்ள டி’மார்க்கீயில் நடைபெற்ற தொழிற்சங்க காங்கிரசின் இளையர் பிரிவின் 21ஆம் ஆண்டு நிறைவுப் பாராட்டு விருந்து நிகழ்ச்சியில், இவ்விருதுக்கான மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் பேசினார்.
“சரியான வாய்ப்புகளைப் கைப்பற்றுவதற்கும் முக்கியமாக முதலாளிகளுடன் தொடர்புகொள்வதற்கும் தேவையான திறன்கள், தன்னம்பிக்கை, தொடர்புகள் முதலியவற்றை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில், அவர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பே, ஆரம்பத்திலேயே தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆதரவை அதிகரித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.


