சுகாதார பராமரிப்பு செலவுக்கு அரசாங்கம் இவ்வாண்டு $21 பில்லியனை ஒதுக்கியுள்ளது.
ஆனால், இது 2030ஆண்டு $30 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் மருத்துவ செலவை மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய நிலையில் வைத்திருக்க பல் சுகாதாரம், நீண்டகால பராமரிப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கம் கூடுதல் மானியங்களை வழங்கும். அத்துடன், வெளிநோயாளி சிகிச்சைக்கு மெடிசேவ் கணக்கிலிருந்து கூடுதல் தொகையைப் பயன்படுத்த முடியும்.
மேலும், அதிகரிக்கும் சுகாதாரத் தேவையை ஈடுசெய்ய சுகாதாரப் பராமரிப்பு திறன் விரிவுபடுத்தப்படும். இதற்காக, அரசாங்கம் மக்கள் உடல்நலனைக் காக்க, ‘குரோ வெல் எஸ்ஜி’ போன்ற நோய்த்தடுப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். இதில், சிறார், பதின்மவயதினர் ஆகியோர் சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்குமாறு அவர்களுக்கு போதிப்பதும் அடங்கும்.
சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் பங்கேற்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெள்ளிக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சுகாதாரப் பராமரிப்பு செலவினம் கட்டுக்கடங்காமல் உயர்வதை அரசு பார்த்துக்கொண்டு வாளாவிருக்காது என்று கூறினார் அமைச்சர் ஓங். எனினும், சுகாதாரப் பராமரிப்பு செலவினத்தை கட்டுப்படுத்துவது மிகுந்த சிரமமான ஒன்று என்று அவர் விளக்கினார். ஏனெனில், இது நமக்கும் நமது அன்புக்குரியவர்களுக்கும் வாழ்வா, சாவா என்ற பிரச்சினையுடையது என்று அமைச்சர் சொன்னார்.
மானியங்களுடன், மெடிஷீல்ட் எனப்படும் தேசிய காப்புறுதித் திட்டம், மெடிசேவ் என்ற கட்டாய மருத்துவ சேமிப்பு நிதி, மெடிஃபண்ட் என்ற வசதி குறைந்தோரைப் பாதுகாக்கும் மருத்துவக் காப்புறுதி ஆகியவை மருத்துச் செலவின அதிகரிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கின்றன என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
“இன்றைய நிலையில், மானியங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 10ல் ஏழு நோயாளிகள் கைக்காசு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. அத்துடன் 10ல் எட்டு நோயாளிகள் $100 வெள்ளிக்கும் குறைவாகவே செலவிடுகின்றனர்,”என்று அமைச்சர் விளக்கமளித்தார்.