எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களைக் கைதூக்கிவிடுவதில் மட்டும் கவனம் செலுத்துவதிலிருந்து கொள்கைகள் மாற்றப்பட்டு வரும் வேளையில், பலதரப்பட்ட ஊழியர்கள் கூடுதல் அரசாங்க உதவியைப் பெறுவர் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியில் டாக்டர் டான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) குறிப்பிட்ட மனிதவள அமைச்சின் மூன்று மாற்றங்களில் இதுவும் ஒன்று.
வணிகங்கள் முற்போக்கான, உற்பத்தித்திறன் கொண்ட பணியிடங்களை அமைக்க உதவுவதற்கும் மனிதவள அமைச்சு ஓர் ஒழுங்குமுறையாளரக மட்டும் இல்லாமல், வணிகங்களுக்கும் ஊழியர்களுக்குமான வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் ஓர் அமைப்பாகவும் இருக்க உதவும் திட்டங்களும் இருக்கும் எனக் கூறப்பட்டது.
லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளி ஏற்பாடு செய்த ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ஐடியாஸ்’ ஐந்து நாள் நிகழ்வின் இறுதி அமர்வில் டாக்டர் டான் இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.
எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ள ஊழியர்களைக் கைதூக்கிவிடுவதைத் தாண்டி, சிங்கப்பூர் ஊழியரணியின் பரந்த அளவிலான நடுநிலை பிரிவினரை விரிவுபடுத்தவும் உயர்திறன் உடையோரைப் பேணவும் அரசாங்கம் இப்போது ஆராய்ந்து வருவதாக டாக்டர் டான் சொன்னார்.
CareersFinder தளம் அல்லது சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு வழங்கும் தனிப்பட்ட வாழ்க்கைத்தொழில் ஆலோசனைச் சேவை மூலம் தங்கள் வாழ்க்கைத்தொழில் எவ்வாறு முன்னேறலாம் என்பதற்கான தகவலை ஊழியர்கள் கண்டறியலாம் என்பதை டாக்டர் டான் சுட்டினார்.
புதிய சந்தைகளை அறிந்துகொள்ள சிங்கப்பூரர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டமும் தொடங்கப்படும்.
ஊழியர்களைப் பணியமர்த்தும்போது, திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை நிறுவனங்கள் கடைப்பிடிக்க அரசாங்கம் உதவும் என்பதையும் ஊழியரணியில் திறன்களை மேம்படுத்துவதற்கான முதலீட்டுக்கு அது ஆதரவளிக்கும் என்பதையும் டாக்டர் டான் சுட்டினார்.

