தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்பங்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் கூடுதல் ஆதரவு: பிரதமர் வோங்

3 mins read
4a38ae2e-9349-4a81-a2f6-1b20c9d653f9
இஸ்தானாவில் உள்ள ஸ்ரீதெமாசெக் கட்டடம் முன்பு நின்று பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினச் செய்தியை வழங்கினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

குடும்பங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்றும் வேலைவாய்ப்பில் பின்னடைவை எதிர்நோக்கும் சிங்கப்பூரர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்படும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினச் செய்தியில் தெரிவித்து உள்ளார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் திரு வோங் தமது முதலாவது தேசிய தினச் செய்தியை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) மாலை வெளியிட்டார்.

சிங்கப்பூரை முன்னேற்றிச் செல்வதற்கான மூன்று உத்திகளை அப்போது அவர் விவரித்தார்.

“முதலாவதாக, நமது மக்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவோம். வருங்காலப் பொருளியலுக்கான திறன்களை ஒவ்வோர் ஊழியரும் பெற வேண்டும்.

“இரண்டாவது, வாழ்க்கைச் செலவினத்தைச் சீராக வைத்துக்கொள்ளும் முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம். இவ்வாண்டு பொருளியல் அதிக வளர்ச்சி பெற்று இருப்பதால் சம்பளங்களும் அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

“விலைவாசி அதிகரிக்கிறது. பணவீக்கம் பல நாடுகளில் ஒரு பிரச்சினையாக உள்ளது. சிங்கப்பூர் அதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், சிங்கப்பூரின் நாணய மதிப்பு வலுவாக இருப்பதால் பணவீக்கத்தின் மோசமான விளைவுகளை நாம் சமாளித்து வருகிறோம்.

“மூன்றாவதாக, நமது சமூக ஆதரவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். நமது மூப்படையும் மக்கள்தொகைக்குக் கூடுதலான சுகாதாரச் சேவைகளும் சமூக ஆதரவும் தேவை.

“பலருக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளன. பிள்ளைகளோடு வயதான பெற்றோரையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் அரசாங்கம் நமது சமூக உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகளைச் செய்கிறது,” என்றார் பிரதமர்.

இஸ்தானா திடலில் அமைந்துள்ள ஸ்ரீதெமாசெக் கட்டடம் முன்பு நின்று திரு வோங் தமது தேசிய தினச் செய்தியை வழங்கினார்.

இஸ்தானாவில் உள்ள தமது அலுவலகத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஸ்ரீதெமாசெக் கட்டடத்திற்குத் தற்காலிகமாக அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அங்குதான் திரு லீ குவான் இயூவும் அவரது குடும்பத்தினரும் 1965 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவுப் பொழுதைக் கழித்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் காத்திருக்கும் சவால்களை அவர் பட்டியலிட்டார்.

“ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் பூசல்கள் தொடர்கின்றன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம், வளரும் ஜனரஞ்சகப் போக்கு, பொருளியல் தேசியவாதம், உலகெங்கிலும் தன்னைப்பேணித்தனம் ஆகியவற்றுடன் பல நாடுகளில் அரசியல் நிலவரம் மோசமடைந்து உள்ளது.

“இவை நமது சுற்றுச்சூழலை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை. நமது தூக்கத்தைக்கூட கலைக்கக்கூடியவை. நாம் நமது நாட்டை மீண்டும் தொடக்கத்தில் இருந்து உருவாக்கப்போவதில்லை.

“இருப்பினும், நாம் மெத்தனமாகக் கடந்தகால உத்திகளை மட்டும் நம்பியிருக்க இயலாது.

“நமது நாடு ஓர் இளமையான தேசம். ஆயினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல சவால்களைக் கடந்து வெற்றி பெற்றுள்ளோம்.

“அதனால் நமது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கலாம்.

“சவால்கள் பல இருப்பினும் நாம் சிங்கப்பூரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம். வாய்ப்புகள் நிறைந்ததாக நமது எதிர்காலம் பிரகாசிக்கும்.

“நமது சமூக இணக்கத்தை வலுப்படுத்தவும் புதிய உயரங்களை எட்ட ஒன்றிணைந்து செயல்படவும் முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தில் சிங்கப்பூரர்கள் கடப்பாடு தெரிவித்தனர். அந்த லட்சிய உணர்வு நமது தேசிய தின அணிவகுப்பின் கருப்பாடலில் எதிரொலிக்கிறது.

“நாம் நமது முன்னேற்றப் பயணத்தில் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றுபட்ட மக்களாக சிங்கப்பூரை முன்னேற்றுவோம். எனது தேசிய தின வாழ்த்துகள்,” என்று திரு வோங் கூறினார்.

பிரதமரின் தேசிய தினச் செய்தியை தமிழில் வழங்கினார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம்.

குறிப்புச் சொற்கள்