செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளைப் பயன்படுத்த நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தொழில்நிறுவனக் கணினியியல் திட்டத்துக்கு (Enterprise Compute Initiative) 150 மில்லியன் வெள்ளி வரை ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். சிங்கப்பூரின் வணிகப் போட்டித்தன்மையை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்பட்ட பல நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.
“செயற்கை நுண்ணறிவை நிறுவனங்கள் திறம்பட பயன்படுத்த இந்தப் புதிய முயற்சி உதவும்,” என்றார் பிரதமர் வோங்.
மேலும், 1 பில்லியன் வெள்ளி மதிப்பில் புதிய தனியார்க் கடன் நிதி (Private Credit Growth Fund) ஒன்றை அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்தார் பிரதமர். இது அதிக வளர்ச்சி அடைந்துள்ள உள்ளூர் நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி வாய்ப்புகள் வழங்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.
“சிங்கப்பூர் உலகளாவிய போட்டித்தன்மையுள்ள புதிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டு நிதி மூலம் நிறுவன வளர்ச்சியை ஆதரிப்பதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.8 பில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
மேலும் பல நிறுவனங்கள் தங்களது வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் உலகளவில் சிறந்து விளங்கிப் போட்டியிடவும் அரசாங்கம் அதிக ஆதரவு வழங்கும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
“வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு எதிர்காலத்தில் முன்னணி நிறுவனங்கள் வளரக்கூடிய ஓர் இடமாக சிங்கப்பூர் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.