தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறை அதிகாரிகளின் மனநலனிற்கு அதிக ஆதரவு

2 mins read
28246570-b390-4420-b929-399edf8ac814
காவல்துறை துணை உதவி ஆணையரும் துணை ஆலோசகர் குழுவின் துணைத் தலைவருமான டே வீ லி (இடது), காவல்துறை உளவியல் சேவை பிரிவின் உதவி இயக்குநரான முதன்மை உளவியலாளர் திருவாட்டி ஹோ ஹுய் ஃபென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறை அதிகாரிகள் உடல் ரீதியாக மட்டும் வலிமையாக இருந்தால் போதாது அவர்கள் மனரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டும். ஒரு காவல்துறை அதிகாரியின் பணியானது விபத்து ஏற்படுத்தியவரைத் தேடி கண்டுபிடிப்பதோடு மட்டும் நின்றுவிடாது, விபத்தில் மாண்டவரின் குடும்பத்தினரிடம் அச்செய்தியைக் கொண்டு சேர்ப்பதும் அவர்களின் பணிதான்.

அச்செய்தியைக் கேட்டு மாண்டவரின் குடும்பம் கதறித் துடிக்கும்போது அதைக் காணும் அதிகாரிகள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அக்குடும்பம் அனுபவிக்கும் வலியைப் பார்க்கும்போது அவர்களுக்குத் தங்கள் சொந்த வாழ்வில் ஏற்பட்ட வலி நினைவுக்கு வரும். அவர்களின் செயல்திறனை இது பாதிக்கிறது.

இப்படி மனரீதியாக பாதிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக காவல்துறை உளவியல் சேவை பிரிவு 1996ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. இருப்பினும் 1993 முதல் மனநலச் சேவை வழங்கப்பட்டு வந்தது.

மன அழுத்த மேலாண்மை பயிற்சி, மனநல ஆலோசனை போன்ற சேவைகளை வழங்கும் ஒரு சிறிய பிரிவாக இது தொடங்கப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல அது காவல்துறை அதிகாரிகளின் மனநலன்களைப் பேணும் திட்டங்கள், பயிற்சி, கட்டமைப்புகள் என விரிவுபடுத்தப்பட்டது.

தனது 30வது ஆண்டு விழாவை இவ்வாண்டு கொண்டாடும் இப்பிரிவு தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது பணியிடத்திலோ பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதற்கான ஆலோசனை வழங்கும் உதவி எண்ணையும் கொண்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) அன்று நடந்த ஈடுபாட்டு அமர்வின் போது காவல்துறை உளவியல் சேவை பிரிவின் உதவி இயக்குநரான முதன்மை உளவியலாளர் திருவாட்டி ஹோ ஹுய் ஃபென் ஊடகங்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தேசத்தைப் பாதுகாப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் உயர் செயல்திறன் கொண்ட சூழலில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான மன வலிமையையும் உளவியல் நல்வாழ்விற்குத் தேவையான ஆதரவையும் கடந்த 30 ஆண்டுகளாக இப்பிரிவு வழங்கி வருகிறது,” எனக் கூறினார்.

“பாதிப்பு ஏற்படும் வரை மனநல ஆலோசனை அமர்வில் நடக்கும் அனைத்து உரையாடல்களும் ரகசியமாக வைக்கப்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

துணை ஆலோசகர்கள், சிங்கப்பூர் காவல் துறையில் பணியாற்றும் தொண்டூழியர்கள் போன்றவர்களுக்கு மனநல ஆலோசனைக்கான பயிற்சியையும் இப்பிரிவு வழங்குகிறது. சக ஊழியர்களுக்குத் தேவைப்படும்போது மனநல ஆலோசனைகளை வழங்குவதற்கு ஏற்றவாறு அடிப்படை ஆலோசனைத் திறன்களில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்