சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடுதல் ஆதரவு

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடுதல் ஆதரவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Oct 2026 - 9:30 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் (எஸ்எம்இ) இப்போது வணிகச் செயல்பாடுகளில் ஏஐ கருவிகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவுடன், சந்தையில் நிரூபிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தீர்வுகளையும் பெற முடியும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இத்தகைய ஆதரவை வழங்குவதற்காக மூன்று புதிய தொழில்துறைப் பங்காளித்துவங்களைத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிவித்தது.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய தீர்வுகளின் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட நம்பகமான உலகளாவிய ஏஐ கருவிகளின் பட்டியலைத் தெரிவுசெய்து வழங்குவதன் மூலம் நிறுவனங்களுக்கு உதவுவதாக ஆணையம் தெரிவித்தது. வாடிக்கையாளர் தொடர்புகள், புத்தாக்கப் படைப்புகளை உருவாக்குதல், வேலையிடக் கூட்டு முயற்சி, நிதி போன்ற வணிகச் செயல்பாடுகள் அவற்றுள் அடங்கும்.

ஆண்டுதோறும் நடைபெறும் ‘எஸ்எம்இஸ் கோ டிஜிட்டல் டே’ நிகழ்வில் பேசியபோது தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிறிய நிறுவனங்கள், பொதுவாகவே பெரிய போட்டியாளர்களைவிடக் குறைந்த மனிதவளம், நிபுணத்துவம், வளங்களைக் கொண்டே சமாளிக்க வேண்டியிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், ஒரு காலத்தில் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்துவந்த திறன்கள் இப்போது சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் எட்டும் தூரத்தில் உள்ளன என்று திருமதி ஜோசஃபின் டியோ கூறினார். அரசாங்க நிதியுதவியுடன் கூடிய ஏஐ தீர்வுகளின் பயன்பாடு 2025ஆம் ஆண்டு முதல் 2026 வரை 20 விழுக்காடு அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டினார்.

இந்நிகழ்வில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உண்மையான வர்த்தகத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வணிகங்களுக்கும் ஊழியர்களுக்கும் பலன்களைப் பெற்றுத்தந்ததற்காக ஆணையம், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் முதலாவது ‘எஸ்எம்இ ஏஐ விளைபயன் விருது’ வழங்கி 30 நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் விரும்புகிறது; அங்குதான் இந்தப் புதிய தொழில்துறைப் பங்காளித்துவங்கள் கைகொடுக்கின்றன.

மற்றச் சந்தைகளில் வரவேற்பைப் பெற்ற, சோதிக்கப்பட்ட தீர்வுகளில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
நிறுவனம்ஏஐசெயற்கை நுண்ணறிவுஆதரவு