வரும் நவம்பர் மாதம் முதல் சிங்கப்பூரர்கள் அதிகமான தாய்லாந்து உணவுகளையும் தின்பண்டங்களையும் வாங்க முடியும்.
ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், அக்கம்பக்கக் கடைகள் மற்றும் இணைய வர்த்தகங்களில் தாய்லாந்தின் மத்திய உணவு சில்லறை வர்த்தகக் குழுமத்தின் தயாரிப்புகள் நவம்பர் முதல் விற்பனைக்கு வரும்.
அப்போது முதல் அந்தக் குழுமத்தின் 30க்கும் மேற்பட்ட ரொட்டி, பிஸ்கட் மற்றும் உணவுத் தயாரிப்புப் பொருள்களை இங்கு வாங்க முடியும்.
அதற்கான பங்காளித்துவ உடன்பாடு அந்தக் குழுமத்திற்கும் ஃபேர்பிரைஸ் குழுமத்திற்கும் இடையில் செப்டம்பர் 3ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது.
தாய்லாந்தின் மத்திய உணவு சில்லறைக் குழுமம் தாய்லாந்தில் ‘டாப்ஸ்’ எனப்படும் பேரங்காடியின் ஆக அதிகமான கிளைகளை நடத்துகிறது.
அந்தக் குழுமத்தின் வணிக முத்திரை தாங்கிய பொருள்களும் தனியார் தயாரிப்புகளும் இங்கு தீவு முழுவதும் உள்ள 340க்கும் மேற்பட்ட பேரங்காடிகள், சியர்ஸ் கடைகள் மற்றும் ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் கடைகளில் விற்பனைக்கு வரும்.
அதேபோல ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தயாரிப்புகளும் கோல்டன் செஃப் போன்ற பயனீட்டாளர் நாடும் தயாரிப்புகளும் தாய்லாந்தின் மத்திய உணவு சில்லறைக் குழுமம் நடத்தும் 700க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளில் விற்பனை செய்யப்படும்.
அக்குழுமத்திற்கும் ஃபேர்பிரைஸ் குழுமத்திற்கும் இடையிலான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் அது.
அதேபோல, ஒரு வாரத்திற்குள் ஆசியாவின் பெரிய சில்லறை வர்த்தகக் குழுமத்துடன் கையெழுத்திடப்பட்ட இரண்டாவது ஒப்பந்தம் அது.
ஏற்கெனவே, ஆகஸ்ட் 28ஆம் தேதி தென்கொரியாவின் லாட் சில்லறை வர்த்தகக் குழுமத்துடன் ஃபேர்பிரைஸ் குழுமம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டிருந்தது.
இவ்வாண்டின் இறுதிக்குள் தென்கொரியாவிலிருந்து ஏராளமான உணவுப் பொருள்களையும் தின்பண்டங்களையும் சிங்கப்பூரில் விற்பதற்கான உடன்பாடு அது.
இதற்கிடையே, இவ்வாண்டில் சிங்கப்பூரர்கள் குழுவாகச் செல்லும் இடங்களில் தாய்லாந்து, இந்தோனீசியா,மலேசியா ஆகியவை மிகவும் பிரபலமான நாடுகள் என்று ‘ஸ்கைஸ்கேனர்’ ஆய்வு நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.