கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிராக சிங்கப்பூரில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் தங்களின் கடமைக்கும் அப்பாற்பட்டு பங்காற்றிய 100,000க்கும் மேற்பட்டோர், தேசிய அளவில் அங்கீகரிக்கப்படுவர்.
சமூகம், வர்த்தகம், அரசாங்கம் ஆகிய பிரிவுகளில் உள்ள இவர்கள், தங்களின் பங்களிப்புக்கும் தியாகங்களுக்கும் சிறப்பு விருது பெறவுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
"விருது பெறுபவர்கள், சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகள், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். பொதுச் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த நமது முன்களச் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களும் இதில் அடங்குவர்.
"அவர்களுடன் அரசாங்க சார்பற்ற அமைப்புகள், தொண்டூழிய அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் துறை, பொதுச் சேவைத் துறை, தனியார் துறை ஆகியவையும் அடங்கும்," என்றார் அவர்.
கொள்ளைநோயின்போது சிங்கப்பூரர் உணர்வை வெளிப்படுத்திய நபர்களைக் கொண்டாடும் வகையில் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1ல் நடைபெற்று வரும் 'புரோஜெக்ட் லயன்ஹார்ட்' ஓவியக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்தபோது அமைச்சர் கான் செய்தியாளர்களிடம் விருது குறித்துப் பேசினார்.
"மீள்திறன், ஒற்றுமை, ஆதரவு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் இந்த சிங்கப்பூர் உணர்வை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். எதிர்கால நெருக்கடி எதுவாயினும் இந்த சிங்கப்பூர் உணர்வுடன் நம்மால் மேலும் வலுபெற்று, மேலும் ஒன்றுபட்டு மீள முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு," என்றார் கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவராகவும் உள்ள திரு கான்.
விருது பெறுவோரில் பெரும்பாலானோருக்கு புதிய தேசிய விருதுகளான 'கொவிட்-19 மீள்திறன் விருது' அல்லது 'கொவிட்-19 மீள்திறன் சான்றிதழ்' வழங்கப்படும்.

