மோசடியில் ஏமாற்றப்பட்டோரில் அதிகமானோர் கடனில் உள்ளனர்

2 mins read
aae4e09e-e184-45b9-9a02-5e1fdbf4a5a7
சிங்கப்பூரில் மோசடியில் பணத்தை இழந்தோரில் பலர் கடனில் உள்ளதாக கடன் அமைப்புகள் தெரிவித்தன. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் கடன் ஆலோசனை அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசடிகளில் பணம் இழந்த 200க்கும் அதிகமானோரைக் கையாண்டுள்ளது.

வர்த்தகங்களுக்கும் கடன்பற்று அட்டைக் கடன்களை அடைப்பதற்கும் பெரும்பாலும் உதவும் லாப நோக்கமற்ற அந்த அமைப்பு 2023ஆம் ஆண்டிலிருந்து மோசடியால் பாதிக்கப்பட்டோரின் சம்பவங்களைப் பதிவுசெய்கிறது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ளோர் மோசடிகளுக்கு இதுவரை இல்லாத அளவில் $1.1 பில்லியன் தொகையை இழந்தனர்.

சிங்கப்பூர் கடன் ஆலோசனை அமைப்பின் தலைமை நிர்வாகி மோசடியால் ஏமாறுவோர் எண்ணிக்கை கூடுகிறது என்றார்.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 33 பேர் மோசடிக்கு இரையானதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டு 130 சம்பவங்களுக்கும் மேல் பதிவாகலாம் என்றார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் கடன் ஆலோசனை அமைப்பு 106 சம்பவங்களைக் கையாண்டது.

ஏமாற்றப்படுவோர் வழக்கமாக முதலீட்டு மோசடிகளில் பெரும்பாலும் பணத்தைப் பறிகொடுப்பதாக அமைப்பு சுட்டியது.

நிதி நிறுவனங்களுடன் பயனீட்டாளர்களுக்கு இருக்கும் சர்ச்சைகளைத் தீர்த்து வைக்க உதவும் நிதித் தொழில் சர்ச்சை தீர்வு நிலையம், மோசடி தொடர்பான சர்ச்சைகள் கூடியதைக் குறிப்பிட்டது.

2022ஆம் ஆண்டு 325 சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு அது 879க்கு அதிகரித்தது.

சிங்கப்பூரின் கடன் ஆலோசனை நிலையம் கையாண்ட மோசடி தொடர்பான சம்பவங்களும் கூடியதாகத் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு ஐந்து விழுக்காட்டிலிருந்த மோசடி தொடர்பான சம்பவங்கள் கடந்த ஆண்டில் 15 விழுக்காடானது.

மோசடிச் சம்பவங்களின்போது கடன் வாங்குவோர் அதைத் திருப்பித் தர கூடுதல் கடன் வாங்குவதாக அமைப்புகள் குறிப்பிட்டன.

கடன் வாங்கி கடனை அடைக்க முற்படுவோர் உதவி நாடவேண்டும். கடன் வாங்குவது பிரச்சினையைத் தீர்க்காது, மாறாக கடன்கள்தான் இன்னும் பெருகும் என்று அவை அறிவுறுத்தின.

குறிப்புச் சொற்கள்
கடன்நிதி மோசடிஅதிகரிப்பு