சிங்கப்பூர் நிறுவன இயக்குநர் சபையில் அதிக பெண்கள்

சிங்கப்பூர் நிறுவன இயக்குநர் சபையில் அதிக பெண்கள்

2 mins read
10caefd9-765e-403b-af24-0343e882387a
முன்னணி 100 நிறுவனங்களின் இயக்குநர் சபையில் 25 விழுக்காடு பெண்கள் இயக்குநர்களாக இருக்கின்றனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் 100 முன்னணி நிறுவனங்களில் கால்வாசி பெண்கள் இயக்குநர் சபையில் இடம்பிடித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டின் 25 விழுக்காடு இலக்கை இது தாண்டியுள்ளதாக இயக்குநர் சபை பன்முகத்தன்மை மன்றத்தின் (Council for Board Diversity: சிபிடி) புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இயக்குநர் சபையில் பெண்களின் பங்கு 2013ஆம் ஆண்டின் 7.5 விழுக்காட்டிலிருந்து 2024 ஜூன் 30 வரையில் 25.3 விழுக்காடாக மும்மடங்கு அதிகரித்துள்ளது என்று மன்றத்தின் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்தார்.

இயக்குநர் சபையில் பாலின பன்முகத்தன்மையை ஊக்குவிக்க 2019ஆம் ஆண்டில் 25 விழுக்காடு பெண்கள் இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டப்பூர்வ இயக்குநர் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 23.3 விழுக்காட்டில் இருந்து 34.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது, அதே சமயம் 100 பொது நன்மதிப்பு பெற்ற அமைப்புகளில்  பெண்களின் பிரதிநிதித்துவம் 27.6 விழுக்காட்டில் இருந்து 31.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

“முன்னேறியது மட்டுமல்லாமல் இன்னும் அதிக உயர் இடத்துக்குச் சென்றுள்ளோம்,” என்று சிபிடியின் இணைத் தலைவரான திருவாட்டி மில்டிரெட் டான் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சுமார் 120 நிர்வாக சபை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இவை, இடைக்கால புள்ளி விவரங்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இவ்வாண்டின் இறுதியில் இறுதி முடிவு வெளியிடப்படும் என்றார்.

சிபிடி, அதன் இணையப் பக்கத்தில் 2030ஆம் ஆண்டிற்குள் 30 விழுக்காடு மகளிர் இயக்குநர் சபையில் பிரதிநிதித்துவம் பெறுவதே அடுத்த இலக்கு என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாலின பன்முகத்தன்மைக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் 100 நிறுவனங்களுக்கு வெளியில் உள்ள நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் பிரதிநிதித்துவம் 14 விழுக்காடாக உள்ளது என்பதை மேற்கோள் காட்டிய துணைப் பிரதமர், பாலின பன்முகத்தன்மைக்கு இன்னும் பலவற்றைச் செய்ய முடியும் என்றார்.

“பட்டியலிடப்படாத நிறுவனங்களில் அதிக பாலின பன்முகத்தன்மையை ஊக்குவிக்க இடமும் உள்ளது,” என்று திரு கான் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்