அதிக இளையர்கள் விளையாட்டுகளில் காயம் அடைகின்றனர்

அதிக இளையர்கள் விளையாட்டுகளில் காயம் அடைகின்றனர்

2 mins read
a508bff7-1fda-4502-92df-4cfb61a0b5e5
2024ஆம் ஆண்டு விளையாடியபோது கைலி சோவ் காயம் அடைந்தார். - படம்: கைலி சோவ் அன்பளிப்பு

சிங்கப்பூரில் அதிக இளையர்களுக்கு விளையாட்டுகள் தொடர்பான காயம் ஏற்படுகிறது.

கைலி சியோவ் அவர்களில் ஒருவர். 2024ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்துலகப் போட்டியில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு விளையாட்டின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டு நொண்டியபடி மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

‘ஏசிஎல்’ (Anterior Cruciate Ligament) எனப்படும் கால் மூட்டுநார் கிழிந்துவிட்ட பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அதற்கான அறுவை சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பயிற்சியை அவர் மேற்கொண்டார்.

ஒரு ஆண்டிற்குப் பிறகே 2025ஆம் அண்டில் அவர் முழுமையாகக் குணமடைந்தார்.

ஆனால் மீண்டும் அவர் விளையாட்டில் ஈடுபட்டபோது அதே போன்ற காயம் மீண்டும் ஏற்பட்டது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய மருத்துவர்கள், கைலி மட்டுமல்ல, இளம் வயதிலேயே விளையாட்டுகளில் ஈடுபடுவதால், அதிகமான இளையர்கள் ஏசிஎல் போன்ற கடுமையான விளையாட்டு தொடர்பான காயங்களுக்கு ஆளாகின்றனர் என்றனர்.

பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளையர்களிடையே ஏசிஎல் காயம் ஏற்படுவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று கேகே தாய், சேய் நல மருத்துவமனையின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 2021ல் 81ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2025ல் 162க்கு அதிகரித்தது.

கேகே மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவரான இணைப் பேராசிரியர் முஹமட் ஆஷிக், அதிகமான இளையர்கள் விளையாட்டுகளிலும், விளையாட்டு தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்பதே இந்த அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய இதர இரண்டு மருத்துவர்களும் இதுபோன்ற காயங்களால் பாதிக்கப்பட்ட அதிக இளம் நோயாளிகளைக் காண முடிகிறது என்று கூறினர்.

ஆரெட்டே ஆர்த்தோபெடிக் நிலையத்தின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வாங் லுஷன், விளையாட்டுக்கான பாதைகள், நேரடிப் பள்ளிச் சேர்க்கை போன்ற பள்ளி அனுமதித் திட்டங்களின் வளர்ச்சி காரணமாக அதிகமான இளையர்கள் இளம் வயதிலேயே விளையாட்டுகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.

“இந்த வாய்ப்புகள் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்க உதவினாலும், அவை அதிகப்படியான பயிற்சிக்கும் ஒரே விளையாட்டில் விரைவில் நிபுணத்துவம் பெறுவதற்கும் வழிவகுக்கக்கூடும். இதனால், ஏசிஎல் போன்ற தசைநார் கிழிவு உள்ளிட்ட சில விளையாட்டு தொடர்பான காயங்களின் அபாயம் அதிகரிக்கலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கணிப்பு, உலகளாவிய போக்கை பிரதிபலிக்கிறது.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் 2017ல் வெளியிட்ட ஓர் ஆய்வில் 1994 முதல் 2013 வரை ஆறு முதல் 18 வயதுக்குட்பட்ட நோயாளிகளிடையே ஏசிஎல் கிழிவுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.3 விழுக்காடு அதிகரித்தது கண்டறியப்பட்டது.

மேலும், பிரிட்டனில் கவென்ட்ரி பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று, குழந்தைப் பருவத்தில் உள்ள மோசமான இயக்கத் திறன்களுக்கும், குறிப்பாக காற்பந்து விளையாடும் சிறுமிகளிடையே அதிகரித்து வரும் ஏசிஎல் காயங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தது.

குறிப்புச் சொற்கள்