மனப்பதற்றம், மனஅழுத்தம் உள்ள பெரும்பாலோர் நிபுணத்துவ உதவி நாடுவதில்லை: ஆய்வு

மனப்பதற்றம், மனஅழுத்தம் உள்ள பெரும்பாலோர் நிபுணத்துவ உதவி நாடுவதில்லை: ஆய்வு

2 mins read
46881777-7dba-4059-b677-5aeaf0765be4
பெரியவர்களில் ஐவரில் நால்வர் நிபுணத்துவ உதவி நாடுவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. - படம்: recovered.org

சிங்கப்பூரில் மனப்பதற்றம் அல்லது மனஅழுத்தத்துக்கு ஆளான பெரியவர்களில் ஐவரில் நால்வர் இதுவரை நிபுணத்துவ உதவியை நாடவில்லை என்று டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, அவர்களில் பெரும்பாலானோர் தெரிந்தவர்களிடமிருந்து ஆதரவு பெறுவதை வரவேற்பதும் தெரியவந்துள்ளது. இது, பூர்த்திசெய்யப்படாத மனநலத் தேவைகளைக் கையாள அதிகாரபூர்வமற்ற, சமூகரீதியான ஆதரவு கைகொடுக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுவதாக ‘சிங்கப்பூர் மெடிக்கல் ஜர்னல்’ எனப்படும் மருத்துவ சஞ்சிகையில் சென்ற மாதம் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகள் சுட்டியுள்ளன.

ஆய்வு

மனப்பதற்றம், மனஅழுத்தம் ஆகியவற்றுக்கான அறிகுறிகளை எதிர்நோக்கும் 350 பெரியவர்களைக் கொண்டு இந்த ஆய்வு இணையத்தில் நடத்தப்பட்டது. இதுபோன்ற மனநலப் பிரச்சினைகளால் பொருளியளில் ஏற்படக்கூடிய தாக்கத்தை அறியும் முயற்சியில் ஆய்வு அங்கம் வகிப்பதாக டியூக்-என்யுஎஸ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) கூறியது.

மனநலக் கழகம் உள்ளிட்ட தங்களுடன் இணைந்து பணியாற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோருடன் டியூக்-என்யுஎஸ் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வில் பங்கேற்றோரில் 77 விழுக்காட்டினர் உதவி பெற மனநல மருத்துவர்கள், மனநல நிபுணர்கள், சமுகச் சேவையாளர்கள் போன்ற சுகாதாரத் துறை நிபுணர்களை நாடவில்லை என்பது தெரியவந்தது.

நிபுணர்களின் கருத்து

மனநலப் பிரச்சினைகள் என்றாலே இன்னமும் தவறான கண்ணோட்டம் இருப்பதாக ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான உதவிப் பேராசிரியர் டேனியல் ஃபங் கூறினார். மனநலக் கழகத்தின் பிரிவுகள் ஒன்றில் மூத்த மருத்துவராகப் பணியாற்றும் அவர் சிஎன்ஏ ஊடகத்திடம் பேசினார்.

ஆய்வில் பங்கேற்ற 51 விழுக்காட்டினர், குழு அமர்வுகளின் மூலம் வழங்கப்படும் மனநல ஆதரவைவிட தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் ஆதரவை விரும்புவதாகத் தெரிவித்தனர். அதேவேளை, மெய்நிகரில் ஆதரவு பெறுவதை 43 விழுக்காட்டினர் விரும்புகின்றனர்.

ஒரு வகையான மனநல ஆதரவு எல்லா வகையான மனநல நோயாளிகளுக்கும் தீர்வாக இருக்காது என்றார், டியூக்-என்யுஎசில் மோசமான நோய்களுக்கு ஆளானோருக்குப் பராமரிப்புச் சேவையை வழங்கும் லியென் நிலையத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் எரிக் ஃபிங்கல்ஸ்டீன்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மனநலம்சிகிச்சைஆதரவுஆய்வு