தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்: ஜோகூர் பாருவில் மின்சிகரெட் விற்கும் கடைகள்

2 mins read
d1dad7b5-3df0-432a-bceb-2cf6954645bc
ஜோகூர் பாருவில் உள்ள கேஎஸ்எல் கடைத்தொகுதியில் சில கடைகள் மின்சிகரெட்டுகளை விற்பனை செய்கின்றன. - படம்: சிஎன்ஏ

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் உள்ள மின்சிகரெட் விற்கும் கடைகளின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.

இத்தகவலை ஜோகூர் பாருவில் உள்ள மின்சிகரெட் விற்கும் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சிகரெட்டுகளுக்கு எதிராகச் சிங்கப்பூர் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளபோதிலும் இந்நிலை தொடர்கிறது.

தமது வாடிக்கையாளர்களில் ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் என்று கடைக்காரர்களில் ஒருவர் கூறினார்.

“சிங்கப்பூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் நேற்று என்னிடமிருந்து நான்கு மின்சிகரெட்டுகளை வாங்கினார். அதை எடுத்துக்கொண்டு அவர் சிங்கப்பூர் திரும்பினார்,” என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 8) இன்னொரு கடைக்காரர், சிஎன்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கேஎஸ்எல் கடைத்தொகுதியிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் மின்சிகரெட் விற்கும் பத்து கடைகளுக்குச் சென்று கடைக்காரர்களிடம் சிஎன்ஏ செய்தியாளர்கள் பேசினர்.

கேஎஸ்எல் கடைத்தொகுதி சிங்கப்பூரர்கள் மத்தியில் பிரபலமானது.

ஜோகூர் பாரு குடிநுழைவுச் சோதனைச்சாவடியிலிருந்து கார் மூலம் ஏறத்தாழ பத்து நிமிடங்களில் அக்கடைத்தொகுதியை அடைந்துவிடலாம்.

மின்சிகரெட் தொடர்பான சாதனங்களும் கேஎஸ்எல் கடைத்தொகுதியில் பரவலாகக் கிடைப்பதாக சிஎன்ஏ செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரைப் போலவே ஜோகூர் மாநிலத்திலும் மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கேஎஸ்எல் கடைத்தொகுதியில் உள்ள சில கடைகள் மின்சிகரெட்டுகளை மட்டும் விற்பனை செய்யாமல் பைகள், கைப்பேசி தொடர்பான சாதனங்கள், மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றுடன் மின்சிகரெட் தொடர்பான சாதனங்களை வண்ணமயமான பெட்டிகளில் காட்சிக்கு வைத்து விற்பனை செய்கின்றன.

பல்வேறு சுவைகள் கொண்ட மின்சிகரெட்டுகளைக் கலந்து வாங்கலாம் என்று கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரைக் காட்டிலும் ஜோகூரில் மின்சிகரெட்டுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. எனவே, மின்சிகரெட் பழக்கம் கொண்ட சிங்கப்பூரர்கள் பலர் ஜோகூர் பாருவில் அவற்றை வாங்குவதாக இன்னொரு கடைக்காரர் கூறினார்.

மின்சிகரெட் விநியோகிப்பவர்களுக்கு எதிரான தண்டனையை சிங்கப்பூர் செப்டம்பர் 1லிருந்து மேலும் கடுமையாக்கி உள்ளது.

இதை அடுத்து, சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டதாக ஜோகூர் பாருவில் உள்ள பல கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச்சாவடியில் அல்லது சிங்கப்பூரில் பிடிபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்ற விநியோகப் பணியாளர்கள் சிலர் அஞ்சுவதாக வர்த்தகர் ஒருவர் கூறினார்.

“முன்பு மோட்டார் சைக்கிள், கார் மூலம் மின்சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குள் கொண்டு சென்றோம். ஆனால் தற்போது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. மின்சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குள் கொண்டு செல்ல யாருக்கும் தைரியம் இல்லை,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்