செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் என உலகம் வெகு விரைவாக முன்னேறும் நிலையில் இளையர்களுக்குத் தேவையான தலையாய தகுதி, மற்றவர்களுடன் இணையும் மனிதநேயத் தொடர்பு என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற ஏற்பாட்டில் சனிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்ற இளையர் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குமாரி இந்திராணி, ஆலோசனைக் குழு அங்கத்தில் இளையர்களுக்கான முக்கியத் திறன்களைப் பற்றிப் பேசினார்.
மக்களை இணைக்க ‘வாட்ஸ்அப்’ போன்ற தொடர்புத் தளங்கள் பயன்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய தொழில்நுட்பத்தின் வெற்றி மனிதர்களுக்கிடையிலான இணைப்பின் தேவையால் ஏற்படுத்தப்பட்டது என்று கூறினார்.
“தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த முதலில் மனித குணங்களைப் புரிந்துகொள்வது அவசியம்,” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
அவருடன் தென்கிழக்கு வட்டார மேயரும் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சருமான தினேஷ் வாசு தாஸ், வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் குழு அங்கத்தை வழிநடத்திய திரு தினேஷ், நிச்சயமற்ற உலகச் சூழல் காரணமாக இளையர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி, காலத்திற்கேற்ப நிலைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார்.
“தொழில்நுட்பம் முன்னேறினாலும், தகவல் தொடர்பு, படைப்பாற்றல், வேலைகளுக்கு மதிப்பு கூட்டுதல் போன்ற மனிதத் திறன்கள் இளையர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன,” என்று அவர் கூறினார்.
முதல் முறையாக மார்ச் 14, 15ஆம் தேதிகளில் எக்ஸ்போ, மண்டபம் 4ல் நடைபெற்ற தென்கிழக்கு இளையர் விழா, தொழில், நிதி மற்றும் நல்வாழ்வு ரீதியான வளங்களுடன் இளையர்களைத் தயார்ப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வேலைக்கான விண்ணப்பத்தை எவ்வாறு உருவாக்குவது, சிங்கப்பூரில் வீடு வாங்குவது குறித்த ஆலோசனை, தற்போது பணியமர்த்தும் நிறுவனங்கள் போன்றவை தொடர்பான 50க்கும் மேற்பட்ட சாவடிகள் தொழில், நல்வாழ்வு, வாழ்க்கை முறை என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
இன்றைய இளையர்களிடம் சரியான திறமைகள் உள்ளன என்று குறிப்பிட்ட திரு தினேஷ், “அவர்களை ஒரு பணியில் அமர்த்த வேறு என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதே எங்கள் நோக்கம். இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு நேரடித் தேர்வுகளை அளிக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.

