ஈரறை கொண்ட ஃபிளெக்ஸி வீடுகளை முன்பதிவு செய்த முதியவர்களில் பெரும்பாலோர் 15 முதல் 45 ஆண்டுகள் வரையிலான குறுகியகால குத்தகைகளைத் தேர்ந்தெடுத்தனர். அதில் 40 ஆண்டு குத்தகை மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது.
இதில் 20,185 மூத்தோரில், 10 பேரில் ஒன்பது பேர், 30 முதல் 45 ஆண்டுகள் வரையிலான குத்தகைக் காலத்தைத் தேர்வு செய்துள்ளனர் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) செப்டம்பர் 27ஆம் தேதி ஓர் அறிக்கையில் கூறியது. எஞ்சியுள்ள பெரும்பாலான முதியவர்கள் 20 முதல் 25 ஆண்டு குத்தகையைத் தேர்வு செய்தனர்.
298 முதியவர்கள் மட்டுமே 15 ஆண்டு குத்தகையைத் தேர்வு செய்கிறார்கள். அதே வேளையில் 1,700 க்கும் மேற்பட்ட முதியோர் 99 ஆண்டு குத்தகையை நாடுகிறார்கள்.
இந்தக் குடியிருப்புத் தெரிவு முதியவர்கள் தங்களுடைய தற்போதைய சொத்துகளைப் பணமாக்குவதற்கும், சிறிய ஈரறை கொண்ட ஃபிளெக்ஸி வீடாகக் குறைக்கவும் அனுமதிக்கிறது என்று வீவக கூறியது. இது அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய வருமானத்தை வழங்கும்.
ஈரறை கொண்ட ஃபிளெக்ஸி வீடுகள் 15 முதல் 45 ஆண்டுகள் வரை ஐந்தாண்டு அதிகரிப்புகளில் குறுகியகால குத்தகைகளுடன் வழங்கப்படுகின்றன. இந்தக் குத்தகையானது இளைய விண்ணப்பதாரரை 95 வயது வரை உள்ளடக்கும். குறுகியகால குத்தகை என்றால் வீடு வாங்குவோர் குறைவாக பணம் செலுத்த வகை செய்கிறது.
ஜூன் மாதம் நடைபெற்ற பிடிஓ (BTO) விற்பனையில், 15 ஆண்டுக் குத்தகையுடன் கூடிய ஈரறை கொண்ட ஃபிளெக்ஸி வீட்டின் விலை உட்லண்ட்சில் உள்ள மார்சிலிங் பீக் 1 (Marsiling Peak I) மற்றும் IIஇல் $32,000 ஆகவும், குவீன்ஸ்டவுனில் உள்ள ஹாலந்து விஸ்தா-வில் (Holland Vista) $70,000 ஆகவும் தொடங்கியது. ஒப்புநோக்க, 99 ஆண்டு குத்தகையுடன் கூடிய அதே வீடுகளின் விலை உட்லண்ட்சில் $94,000லிருந்தும் குவீன்ஸ்டவுனில் $209,000லிருந்தும் தொடங்கின.
கிட்டத்தட்ட அனைத்து குறுகிய குத்தகை ஈரறை ஃபிளெக்ஸி வீடுகளின் விலை $200,000க்கும் குறைவாக இருப்பதாகவும், முதிர்ச்சியடையாத பேட்டைகளில் உள்ள பெரும்பாலான வீடுகளின் விலை $100,000க்கும் குறைவாக இருப்பதாகவும் வீவக கூறியது.
36 முதல் 46 சதுர மீட்டருக்கு இடைப்பட்ட ஈரறை கொண்ட ஃபிளெக்சி வீடுகளுக்கான விலையை, ரொக்கம் அல்லது மத்திய சேம நிதிப் பணத்தைப் பயன்படுத்தி முழுமையாக முன்கூட்டியே செலுத்த வேண்டும். மேலும் அந்த வீடுகளை மறுவிற்பனை செய்யவோ, வாடகைக்கு விடவோ முடியாது.
தொடர்புடைய செய்திகள்
இனி வீடு தேவைப்படாத உரிமையாளர்கள் அதை கழகத்திடம் திருப்பிக் கொடுத்து, மீதமுள்ள குத்தகை காலத்துக்கான பணத்தைத் திரும்பப் பெறலாம்.
2024 ஜூன் 30ஆம் தேதி வரை, சுமார் 53,900 ஈரறை கொண்ட ஃபிளெக்ஸி வீடுகள், 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் விற்பனைக்கு விடப்பட்டன. அதில் சுமார் 71 விழுக்காடு அதாவது 38,378 வீடுகள், வீடு வாங்குபவர்களால் முன்பதிவு செய்யப்பட்டவை. மேலும் 22,822 வீடுகளுக்கான சாவிகள் இதுவரை வழங்கப்பட்டு விட்டன என்றும் கழகம் கூறியது.
இதை வாங்குபவர்களில் 57 விழுக்காட்டினர் 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். எஞ்சியுள்ள 43 விழுக்காட்டினர் ஒற்றையர் மற்றும் குடும்பங்கள் உடையவர்கள்.
தகுதியான முதியவர்கள், முதியோருக்கான வீட்டு போனஸ் (Silver Housing Bonus) போன்ற அரசாங்க மானியங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தங்களுக்கு இருக்கும் வீட்டை விற்று, அதில் கிடைக்கும் தொகையை மத்திய சேம நிதி ஓய்வூதியக் கணக்கிற்கு மாற்றும்போது $30,000 வரை ரொக்க போனஸ் கிடைக்கும்.
இத்திட்டத்தால் ஜூன் 30ஆம் தேதி வரை 2,300க்கு மேற்பட்ட குடும்பங்கள் பலனடைந்துள்ளன என்றும் வீவக கூறியது.
அக்டோபரில் வரவிருக்கும் பிடிஓ வீட்டு விற்பனையில், அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், ஜூரோங் வெஸ்ட், காலாங்/வாம்போ, பாசிர் ரிஸ், செங்காங் ஆகிய இடங்களில் ஈரறை கொண்ட ஃபிளெக்ஸி வீடுகளை கழகம் அறிமுகப்படுத்தும்.
முதியோர் சார்ந்த சேவைகளுடன் கூடிய உதவியுடன் வாழும் வீடுகளும் கேலாங்கில் உள்ள மெக்பர்சனில் அறிமுகப்படுத்தப்படும். சமூகப் பராமரிப்பு வீடுகளைக் கொண்டு நான்காவது குடியிருப்புத் திட்டமாக இது திகழும்.