எரிசக்தி விலை உயர்வால் பெரும்பாலான சிங்கப்பூர் நிறுவனங்கள் பாதிப்பு

எரிசக்தி விலை உயர்வால் பெரும்பாலான சிங்கப்பூர் நிறுவனங்கள் பாதிப்பு

2 mins read
929238fd-8886-4bb0-81c5-f3d7f6308bc3
ஜனவரி 22ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் மார்கெட் ஸ்திரீட்டில் சாலையைக் கடக்கும் அலுவலக ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வு, சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, சில நிறுவனங்கள் பணிக்கு ஆளெடுப்பதை நிறுத்திவைத்துள்ளதுடன் ஊழியர்களுக்கான சலுகைகளையும் குறைக்கின்றன.

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு நடத்திய அண்மைய ஆய்வில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 96 விழுக்காட்டு நிறுவனங்கள், தங்களின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தன. எரிசக்தி விலை உயர்வால் மின்சாரம், எரிபொருள், மூலப்பொருள்கள், சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்டது.

ஐந்தில் ஒரு நிறுவனம், 25 விழுக்காட்டிற்கும் அதிகமான கடும் விலை உயர்வைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தது. 41 விழுக்காட்டு நிறுவனங்கள், 11 முதல் 25 விழுக்காடு வரையிலான மிதமான விலை உயர்வை எதிர்கொண்டுள்ளன. எஞ்சிய நிறுவனங்கள், 1 முதல் 10 விழுக்காடு வரையிலான சிறிய உயர்வைச் சந்தித்துள்ளன.

பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், மனிதவளச் செலவு அதிகரிப்பது குறித்தும் கவலை தெரிவித்துள்ளன.

தங்களின் ஊழியர் எண்ணிக்கையிலோ பணி முறையிலோ இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை என 83 விழுக்காட்டு நிறுவனங்கள் கூறின.

எனினும், மாற்றங்களைச் செய்துள்ள நிறுவனங்களில் 67 விழுக்காட்டு நிறுவனங்கள், பணிக்கு ஆளெடுப்பதையும் விரிவாக்கத் திட்டங்களையும் தள்ளிப்போட்டுள்ளன. அதேபோல, 33 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர்களை வேறு பணிகளுக்கு மாற்றியுள்ளன, அல்லது அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளித்துள்ளன. கால்வாசி நிறுவனங்கள் போனசையும் இதர சலுகைகளையும் குறைத்துள்ள அதே வேளையில், 20 விழுக்காட்டு நிறுவனங்கள் வேலை நேரத்தைக் குறைத்துள்ளன.

அடுத்த ஆறு முதல் 12 மாத காலத்திற்கான பொருளியல் சூழல் குறித்து 39 விழுக்காட்டு நிறுவனங்கள் எதிர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன.

எரிசக்தி விலைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டால், அரசாங்கத்திடமிருந்து வரிச் சலுகைகள் அல்லது நிதியுதவி கிடைப்பது தங்களுக்குப் பெரிதும் உதவும் என்று 83 விழுக்காட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், எரிசக்தி மானியம் வழங்கவும் செலவுகளை உயர்த்தக்கூடிய மனிதவளக் கொள்கை மாற்றங்களைத் தள்ளிப்போடவும் அவை கேட்டுக்கொண்டுள்ளன.

ஏப்ரல் 10 முதல் 16 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நிதி, உற்பத்தி, சேவை, கட்டுமானத் துறைகளைச் சேர்ந்த 210 நிறுவனங்கள் பங்கேற்றன.

குறிப்புச் சொற்கள்
எரிசக்திஊழியர்விலைநிறுவனம்மத்திய கிழக்கு