பல சிங்கப்பூர்வாசிகள் தற்சார்புடைமைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்: கருத்தாய்வு

பல சிங்கப்பூர்வாசிகள் தற்சார்புடைமைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்: கருத்தாய்வு

2 mins read
f7236874-6ba9-471c-a9f4-8f18da19cc5e
ஏற்புடைய வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் விஷயங்களுக்குத் தனிநபர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐவரில் மூவருக்கும் அதிகமானோர் கூறினர். - டம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குளிர்சாதனம், அவசரச் சேமிப்பு போன்ற சொந்த அத்தியாவசியத் தேவைகளுக்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பொதுவாக சிங்கப்பூர்வாசிகள் நம்புகின்றனர்.

இருப்பினும், மூன்று வேளை உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்குச் சிரமப்படுவோருக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

சமூகப் பங்களிப்பு, இளைப்பாறும் தேவைகள் ஆகியவற்றுக்குத் தம்மைத் தாமே நம்பியிருக்க பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

ஆனால் அரசாங்கம் சுகாதாரப் பராமரிப்பு, குழந்தைப் பராமரிப்பு தொடர்பான விவகாரங்களில் உதவ வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

கொள்கை ஆய்வுக் கழகம் (ஐபிஎஸ்) அண்மையில் நடத்திய கருத்தாய்வில் இந்தக் கருத்துகள் திரட்டப்பட்டன.

அத்தியாவசியத் தேவைகளுக்கு யார் உதவ வேண்டும் என்பதன் தொடர்பில், சிங்கப்பூர் குடியிருப்பாளர்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்வதற்கு நடத்தப்பட்ட கருத்தாய்வின் முடிவுகள், ஜூலை 12ஆம் தேதி சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அத்துடன், தங்கள் அன்றாடக் குடும்பத் தேவைகளுக்குப் பலர் எவற்றை அத்தியாவசியப் பொருள்களாகக் கருதுகின்றனர் என்பதைக் கண்டறிய அந்தப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளும் பகிரப்பட்டன.

2,000 சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் கொள்கை ஆய்வுக் கழகம் ஜூன் மாதம் நடத்திய கருத்தாய்வில் பங்கெடுத்தனர்.

அதில், குழந்தைப் பராமரிப்பு, அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து, குடும்பப் பொருள்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் 39 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

கூடுதலாக, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் கருத்தாய்வில் கலந்துகொண்டனர்.

சராசரியாக, பட்டியலிடப்பட்ட 39 அத்தியாவசியத் தேவைகளில், கிட்டத்தட்ட 16க்குத் தனிநபர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கருத்தாய்வில் பங்கெடுத்தவர்கள் கருதினர்.

அவற்றில் பத்துக்கு அரசாங்கமும், ஒன்பதுக்கு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்.

தென்கிழக்காசிய நாடு ஒன்றில் வருடாந்திர விடுமுறை, மாதம் ஒரு முறை உணவகங்களுக்குச் சென்று உணவருந்துவது போன்ற ஏற்புடைய வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் விஷயங்களுக்கு தனிநபர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐவரில் மூவருக்கும் அதிகமானோர் கூறினர்.

ஒப்புநோக்க, வழக்கமான சுகாதாரப் பரிசோதனை, சுகாதாரப் பராமரிப்புக் கட்டணங்கள், கைக்குழந்தைப் பராமரிப்பு, வேலைசெய்யும் பெற்றோருக்குக் குழந்தைப் பராமரிப்புச் சேவைகள் ஆகியவற்றுக்கு அரசாங்கம் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று அவர்கள் கருதினர்.

இந்நிலையில், இரண்டு கருத்தாய்வுகளும் தமது அமைச்சின் செலவில் நடத்தப்பட்டதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.

“பல சிங்கப்பூரர்கள் தங்கள் சொந்தத் தேவைகளுக்குப் பொறுப்பேற்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதை கருத்தாய்வு காட்டுகிறது. இது ஆச்சரியத்துக்குரியது அல்ல.

“சிங்கப்பூரர்கள் தற்சார்புடைமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் வழங்குவதில் பெருமைகொள்ளும் குறைந்த வருமானம் பெறுவோரும் அவர்களில் அடங்குவர்,” என்றார் திரு மசகோஸ்.

குறிப்புச் சொற்கள்