சிங்கப்பூரின் சொத்துச் சந்தையில் பழைய கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை, விலை, விற்பனை ஆகியவை அதிகரித்துள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையமும் ரியலியொன் ஆய்வுக் கழகமும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 40 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை கூடியிருப்பதாக அது குறிப்பிட்டது.
2018ஆம் ஆண்டிலிருந்து பழைய, குத்தகை காலமுடைய கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை படிப்படியாக அதிகரித்திருப்பதுடன் அத்தகைய வீடுகள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.
2018ஆம் ஆண்டு 40 ஆண்டுக்கும் அதிகமான குத்தகை காலமுடைய கூட்டுரிமை வீடுகள் சராசரியாக ஒரு சதுர அடிக்கு $914 விலைக்கு மறுவிற்பனையாகின.
2024ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுவிற்பனைகள் மும்மடங்கு கூடியது. அப்போது ஒரு சதுர அடிக்கு $1,109 என்ற விலையில் 323 கூட்டுரிமை வீடுகள் கைமாறின.
இவ்வாண்டு ஜூலை வரை ஒரு சதுர அடிக்கு $1,115 விலையில் குறைந்தது 215 கூட்டுரிமை வீடுகள் விற்கப்பட்டன.
2018ஆம் ஆண்டுக்கு முன் பழைய கூட்டுரிமை வீடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது. 2010ஆம் ஆண்டு 81 வீடுகளும் 2014ஆம் ஆண்டு 13 வீடுகளும்தான் விற்பனையாகின.
பழைய கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை அதிகரித்திருந்தாலும் அதை விற்பதில் சவால்கள் இருக்கவே செய்கின்றன என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர். அத்தகைய கூட்டுரிமை வீடுகளை வாங்கும் சரியான நபர்களையும் கண்டுபிடிக்க கூடுதல் காலம் எடுக்கிறது என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
இவ்வாண்டின் முற்பாதியில் ஒரே அளவிலான நான்கு வீடுகள் $1.7 மில்லியனிலிருந்து $1.97 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
புதிய கூட்டுரிமை வீடுகள் சிறியவை, அதிக விலை உள்ளவை. பழைய கூட்டுரிமை வீடுகளில் கூடுதல் இடவசதி உள்ளன என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.