சாலை விபத்தில் சிக்கிய தாயும் ஒருவயதுக் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
cc7c4f80-5015-435a-99ff-8ade25cb47ac
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது தாயும் அவரது குழந்தையும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். - படம்: சமூக ஊடகம்

மூன்று கார்கள் விபத்தில் சிக்கியதில் 34 வயதுப் பெண் ஒருவரும் அவரது ஒரு வயதுக் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) மாலை ஏர்போர்ட் பொலிவார்ட் பகுதியில் நடைபெற்றது.

விபத்து நடந்திருப்பதாக இரவு 8.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

விபத்தில் சிக்கிய கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தையும் அவரது தாயாரும் செங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது அவ்விருவரும் சுயநினைவில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லேசான காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக அவர்கள் கூறினர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை விபத்துகளும் அவை தொடர்பான மரணங்களும் அதிகரித்து வருவதாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது.

ஆகஸ்ட் மாதம் அந்தத் துறை வெளியிட்ட ஆண்டின் நடுப்பகுதிக்கான அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன.

2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் காயங்களை ஏற்படுத்திய 3,437 விபத்துகள் பதிவான நிலையில், இவ்வாண்டின் முதல் பாதியில் அந்த எண்ணிக்கை 3,740ஆக அதிகரித்தது.

அந்த விபத்துகளில் 2024ஆம் ஆண்டு 4,665 பேர் காயமடைந்தனர். இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 4,860க்கு அதிகரித்தது என போக்குவரத்துக் காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்துகார்காயம்