பெண்கள் கழிவறையைச் சிறுவன் பயன்படுத்தியதால் இரு பெண்கள் இடையே சண்டை

பெண்கள் கழிவறையைச் சிறுவன் பயன்படுத்தியதால் இரு பெண்கள் இடையே சண்டை

2 mins read
6c29b39c-9ad4-4fb6-a42a-91ada5059491
தமது நடத்தைக்காக 39 வயது வாங் ஜிங்கிற்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.  - படம்: பிக்ஸாபே

தாயார் ஒருவர் தமது எட்டு வயது மகனைப் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்தச் சொன்னதால், அவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

அந்தச் சிறுவனின் தாயார் போக்குவரத்துக்கு எதிராக மற்றொரு பெண்ணை நோக்கி வாகனத்தைச் செலுத்தினார்.

அவரது நடத்தைக்காக 39 வயது வாங் ஜிங்கிற்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஜூலை 5ஆம் தேதி புளோக் 750A, சாய் சீ லேனில் உள்ள வர்த்தக அலுவலகக் கட்டடம் ஒன்றில், கூடைப்பந்து வகுப்புகளுக்காக வாங் தன் மகனை அழைத்துச்சென்றார்.

பிற்பகல் 3 மணியளவில் வாங் தன் மகனைக் கழிவறைக்குப் போகச் சொன்னதாகவும், அவன் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தபோது வாங் வெளியில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் 33 வயது டான் சியோக் கிம் ஐரிஷும் அவரது சக ஊழியரான திருவாட்டி டே லே லெங்கும் பெண்கள் கழிவறையினுள் இருந்தனர்.

அந்த இரு பெண்களும் வாங்கின் மகனும் கழிவறையைவிட்டு வெளியேறி மின்தூக்கியை நோக்கி நடந்துகொண்டிந்தனர். அப்போது திருவாட்டி டே, வாங்கின் மகன் ஆண்கள் கழிவறையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று திருவாட்டி டானிடம் கூறியதை வாங் கேட்டுவிட்டார்.

நால்வரும் மின்தூக்கிக்குள் சென்றதும், தன் மகன் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்தியதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று வாங் உரக்கக் கத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

அதனைத் தொடர்ந்து, வாங் தமது கையால் டானின் முகத்தைத் தாக்க முனைந்தார். டானின் முகக்கவசம் கிழிந்தது.

டானின் தாயார், அவரை மகளாகப் பெற்றதற்கு வெட்கப்படவேண்டும் என்று டானிடம் வாங் கூறினார். கோபமடைந்த டான் வாங்கைத் தள்ளியதால், அவர் கீழே விழுந்தார்.

அதன்பிறகு அவர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.

இருப்பினும், வாங் அவ்விரு பெண்களைத் தேடுவதற்காக அப்பகுதியைச் சுற்றி வாகனத்தை ஓட்டினார். அந்தப் பெண்களைக் கண்டதும் வாங் போக்குவரத்துக்கு எதிராக ஓட்டி, வாகனத்தை நிறுத்துவதற்கு முன்னர் திருவாட்டி டேயை மோதினார்.

சண்டையில் ஈடுபட்டதற்காக டானுக்கும் இம்மாதத் தொடக்கத்தில் $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்