திருமணத்திற்கு முன்னர் திரு நிஜாமுதீன் இஷாக்கிடம், வளர்ப்புப் பெற்றோராக இருக்க உடன்படுவீர்களா என்று நஸ்ரின் ஷா பீவி கேட்டதும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து 36 வயது நஸ்ரினும் அவரது கணவரும் இதுவரை மொத்தம் ஆறு பிள்ளைகளை வளர்த்துள்ளனர். திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இருவரின் வளர்ப்புப் பெற்றோரின் பயணம் தொடங்கியது.
நஸ்ரின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். கடுமையான பின்னணியில் இருந்து வரும் பிள்ளைகளுக்கும், குடும்பங்களுக்கும் ஆலோசனை வழங்கி வரும் நஸ்ரின், பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்களைக் கண்டு மனமுடைந்து போகாத நாளே இல்லை.
அத்தகைய பிள்ளைகளுக்கு ஆதரவளித்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் எப்போதும் இருந்து வந்தது.
நிஜாமுதீன் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேலாளராகப் பணியாற்றி வந்தாலும் சிறைச்சாலையில் தொண்டூழியராகச் சேவையாற்றி வருகிறார். கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை அவர்களை வளர்ப்புப் பெற்றோர்களாக இணைத்தது.
தற்காலிக வளர்ப்புப் பெற்றோரான நஸ்ரினையும், அவரது கணவர் நிஜாமுதீனையும், 52, “அம்மா, அப்பா” என்று தமிழில் செல்லமாக அழைத்து உரிமை கொண்டாட அண்மையில் ஒரு மகள் வந்துவிட்டார்.
நஸ்ரினும், நிஜாமுதீனும் தாங்கள் தத்தெடுத்த மகள் நூருடன் அன்னையர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அவர்கள் வளர்த்த ஆறு பிள்ளைகளில் நூரும் ஒருவர்.
சிறிது காலம் நூரை வளர்த்து வந்த இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்னையர் தினத்தன்று நல்ல செய்தி காத்திருந்தது. நூரைப் பெற்ற தாய், தனது மகளைத் தத்துக்கொடுக்க ஒப்புதல் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“தொடக்கத்தில் ஒரு பிள்ளையைத் தத்தெடுக்க வேண்டுமென்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் தத்தெடுக்கலாம் என்பதில் இருவரும் ஒருமித்த எண்ணத்துடன் இருந்தோம்,” என்று நஸ்ரின் கூறினார்.
நூரை அதிகாரபூர்வமாகத் தத்தெடுக்கலாம் என்று சென்றாண்டு சிறுவர் தினத்தன்று செய்தி கிடைத்தது. “அச்செய்தி எனக்கு அன்னையர் தினப் பரிசாக இருந்தது,” என்று உணர்ச்சிபொங்கச் சொன்னார் நஸ்ரின்.
நூரை முதலில் சந்தித்த தருணங்களை நினைவுகூர்ந்த இருவரும் நூர் தொடக்கத்தில் நஸ்ரினுடன் அதிகம் பேசவில்லை என்றனர்.
“நூர் என்னுடன் மிக நெருக்கமாக இருந்தார். நஸ்ரினுடன் அவள் பழகவில்லை,” என்றார் நிஜாமுதீன்.
புறக்கணிப்பு, குறிப்பாகப் பெண்களால் கைவிடப்பட்ட காரணங்களால் நூர் ஆண்களுடன் எளிதில் பழகுவதை புரிந்துகொண்ட நஸ்ரின், மனம் தளரவில்லை.
“நூர் என்னுடன் பாசமாகப் பழக வேண்டும் என்பதற்காக அவளிடம் அதிக அக்கறையும் அன்பும் காட்டத் தொடங்கினேன்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் நஸ்ரின்.
விரைவில் நஸ்ரினை “அம்மா” என்று அழைக்கத் தொடங்கினார் நூர்.
மிக துடிப்புடன் இருக்கும் நூர் தாய், தந்தையரின் குடும்ப உறுப்பினர்களுடனும் பின்னிப் பிணைந்துள்ளார். பள்ளியில் தமிழ்மொழி கற்றுவரும் நூர் தமிழில் சரளமாகப் பேசுகிறார்.
பின்னர் நூரின் விருப்பப்படி இருவரும் 13 மாதக் குழந்தையை வளர்த்து வந்தனர். நஸ்ரின் அக்குழந்தையுடன் அன்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ள நூருக்குக் கடினமாக இருந்தது.
நூருக்குப் புரிந்துகொள்ளும் தன்மை வந்தபிறகு பிள்ளைகளை வளர்க்க தம்பதியர் திட்டமிட்டுள்ளனர். தற்போதைக்கு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு இடைக்காலப் பராமரிப்பு வழங்க அவர்கள் தயாராக உள்ளனர்.
“இன்னும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளைத் தத்தெடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கென ஒரு பிள்ளை பிறந்தாலும் மற்றப் பிள்ளைகளுக்குச் சேவையாற்றுவதைத் தொடர்வோம்,” என்றார் நிஜாமுதீன்.
வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு வீட்டில் ஏற்ற சூழலை அமைத்துத் தருவது தொடக்கத்தில் சவால்மிக்கதாக இருந்தபோதும் நாளடைவில் அந்தப் பிள்ளைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அந்த அனுபவம் மனத்திற்கு நெருக்கமானது என்றார் நிஜாமுதீன்.
“நூர் எங்கள் வாழ்க்கையில் இணைந்த பிறகு நான் கற்றுக்கொண்ட பலவற்றில் எப்படி மீள்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதும் ஒன்றாகும்,” என்று குறிப்பிட்டார் நஸ்ரின்.