முதுநிலைப் பட்டக்கல்விக்குத் தயாராகும் குடும்பத் தலைவி

வரவுசெலவுத் திட்ட அறிவிப்பில் மூத்தோரின் திறன்மேம்பாட்டுக்கு ஊக்குவிப்பு 

முதுநிலைப் பட்டக்கல்விக்குத் தயாராகும் குடும்பத் தலைவி

2 mins read
82fbc70f-8133-4774-b483-d467224c671a
குடும்பத்தாருடன் சுசிலா நாராயணன் (இடமிருந்து இரண்டாமவர்). - படம்: சுசிலா நாராயணன்

இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாரும் தாதியருமான 54 வயது சுசிலா, திறன் மேம்பாட்டுக்கான அடுத்த கட்டத்தை எட்டவுள்ளார்.

தாதிமைத் துறையில் முதுநிலைக் கல்வி பயில விரும்பும் சுசிலா நாராயணன், ஈராண்டுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த எண்ணுகிறார்.

வரும் மார்ச் மாதம் முதல் இந்தப் ‘பணியிடைக்காலப் பயிற்சிப் படித்தொகை’ , பகுதிநேரமாகப் பயிற்சி பெறுவோருக்கும் நீட்டிக்கப்படும்.

‘சன்லவ்’ பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றும் சுசிலா, வேலையையும் குடும்பப் பொறுப்புகளையும் சமன்செய்ய வேண்டிய நிலையில், பகுதிநேரப் பயிற்சிக்கான சலுகை தமக்குப் பயனளிப்பதாகக் கூறினார்.

முதியோருக்குத் திறன் மேம்பாடு என்பது வாழ்க்கைத்தொழில் முன்னேற்றத்தை மட்டும் சார்ந்ததன்று எனத் திருவாட்டி சுசிலா கூறினார்.

“திறன் மேம்பாட்டுக்கும் துடிப்பான மூப்படைதலுக்கும் வலுவான தொடர்பு உள்ளது. நான் பணிபுரியும் பராமரிப்பு இல்லத்தில் இதனைக் கண்கூடாகப் பார்க்கிறேன். புதிய திறன்களை வெற்றிகரமாகக் கற்கும் மூத்தோர் உற்சாகம் அடைகின்றனர். அவர்களது திறன்களை வேலையிடங்கள் பயன்படுத்த முனைந்தால் சமூக ஒருங்கிணைப்பு மேம்படும்,” என்றும் அவர் கூறினார்.

மூத்தோரிடையே இந்தத் துடிப்பு இருப்பதை உணர்ந்துள்ள அரசாங்கம், அவர்களது வாழ்க்கைத்தொழிலின் பிற்பகுதியில் அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்கச் செயல்பட்டு வருகிறது.

60 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களைப் பணியில் அமர்த்த முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசாங்கம், ‘மூத்தோர் வேலைநியமன உதவித்தொகையை’ (Senior Employment Credit) மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கிறது. 4,000 வெள்ளிக்கும் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான சம்பளச் செலவின் ஒரு பகுதியை இந்தத் தொகை ஏற்கிறது.

மேலும், மூத்தோருக்கு ஏற்ற வேலைகளை வடிவமைக்கவும் பல்வேறு வயதுப் பிரிவினரும் பணியாற்றும் லையிடங்களை உருவாக்கவும் மனிதவள அமைச்சு, முத்தரப்புப் பணிக்குழுவை அமைக்கவுள்ளது.

தமது வேலையிடத்தில் திட்டங்களை வழிநடத்த இளையர்களுக்கு ஏற்பாடு செய்த அனுபவம் கொண்ட திருவாட்டி சுசிலா, பல்வேறு தலைமுறையினரின் உறவாடலும் ஒத்துழைப்பும் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதைக் கண்கூடாகக் காண்பதாகக் குறிப்பிட்டார்.

“எல்லாத் தலைமுறையினரையும் உள்ளடக்கும் வேலையிடம் முழுமைபெறும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்