கணவருடன் நிகழ்ந்த கருத்துவேறுபாட்டைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த ஏழு வயது மகனை அறைந்து, உதைத்து, மிதித்து கொடுமைப்படுத்திய தாயாருக்கு திங்கட்கிழமை (ஜனவரி 26) நீதிமன்றம் ஒன்பது மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தனது தண்டனையை எதிர்த்து அந்தத் தாய் மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். அவரது வழக்கறிஞர் அதிக அபராதம் விதிக்கக் கோரி வாதாடியும் வெற்றிபெறாத நிலையில் தாயார் அந்த முடிவை எடுத்துள்ளார்.
தாக்குதல் சம்பவம், கடந்த 2022ஆம் ஆண்டு நடந்துள்ளதோடு, வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமரா கருவியிலும் பதிவாகியுள்ளது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி, கணவருக்கும் அத்தாய்க்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
அப்போது மகனை அந்தத் தாய் தகாத வார்த்தைககளால் திட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது. கணவர் ஓர் அறைக்குள் சென்றதும் தாயார் கைப்பேசியில் உரையாடியபடி அவ்வழியே வந்த அந்தச் சிறுவனை முதலில் திட்டுகிறார்.
பிறகு அவனை அறைந்ததும் அவன் கீழே விழுகிறான். அப்போது அவனைத் தாயார் உதைத்ததோடு, மிதித்துள்ளதும் கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, வெளியே வந்த தந்தை தாயாரை தடுத்து நிறுத்தினார்.
பிறகு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது.
சம்பவம் குறித்து தந்தை காவல்துறையில் 2024ஆம் ஆண்டில் புகார் செய்துள்ளார். இருவருக்கும் இடையே விவாகரத்து பெறுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்துவருகின்றன.
பிள்ளைகளைத் திருத்துகிறோம் என்ற பெயரில் அவர்கள்மீது வன்முறையை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளப்படாது என்று நீதிபதி பெற்றோருக்கு நினைவூட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தத் தாயார் செய்த குற்றத்துக்கு, எட்டு ஆண்டு சிறையோடு $8,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

