4 பிள்ளைகள்மீது சுடுநீர் ஊற்றிய தாயாருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

1 mins read
f55dbbb4-83c9-42e7-af5e-172890831e88
அந்த மாது, குவளையில் சுடுநீரை நிரப்பி அதைத் தனது பிள்ளைகள் மீது எறிந்தார். - கோப்புப் படம்: ஐஸ்டாக்

சிங்கப்பூரில், தனது குழந்தைகள் மீது சுடுநீரை எறிந்த 34 வயது தாயாருக்கு வியாழக்கிழமை (ஜனவரி 9) ஒன்றரை ஆண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டது.

குழந்தைகளில் ஒருவர் தன்னிடமிருந்து பணத்தைத் திருடியதாகச் சந்தேகித்ததால், அவர் அவ்வாறு செய்தார்.

நான்கு பிள்ளைகளுக்கு ஒற்றைத் தாயாரான அவர் மனநல மதிப்பீட்டைப் பெற்று, கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளை எடுத்து, மனநல சிகிச்சைக்கு இணங்க வேண்டும்.

அதோடு, சமூக சேவை அமைப்பு அவருக்குத் தேவை என்று கருதும் ஆலோசனைத் திட்டங்களிலும் அவர் பங்கெடுக்க வேண்டும். குழந்தை பாதுகாப்புச் சேவை நடப்பில் வைத்துள்ள பாதுகாப்புத் திட்டத்தையும் அவர் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்த மாதின் நன்னடத்தை உத்தரவு மறுஆய்வு செய்யப்படும்.

நன்னடத்தைக் காலத்தின்போது அவரது நல்ல நடத்தையை உறுதிசெய்ய, அவரது சகோதரி $5,000 பிணைத்தொகையையும் முன்வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகளின் அடையாளங்களைப் பாதுகாக்க மாதின் பெயர் வெளியிடப்படமுடியாது. 2022ஆம் ஆண்டு ஜூலை சம்பவம் நடந்த நேரத்தில், அந்தக் குழந்தைகளின் வயது 8,9,10,11ஆக இருந்தது.

அந்த மாது நன்னடத்தை உத்தரவின் நிபந்தனைகளை மீறக்கூடாது என்று நன்னடத்தை உத்தரவை விதித்த பின்னர், மாவட்ட நீதிபதி டான் ஜென் ச அவருக்கு நினைவூட்டினார். அவ்வாறு செய்தால், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி புதிய தண்டனைக்கு ஆளாவார் என்றார் நீதிபதி.

குறிப்புச் சொற்கள்