ஷெங் சியோங் பேரங்காடியின் அதிர்ஷ்டக் குலுக்கில் 30,000 வெள்ளி வென்றுள்ளார், ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான மாது.
அண்மைக் காலமாக மோசடிச் சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துவரும் நிலையில் தாம் வென்றதைத் தெரியப்படுத்த வந்த தொலைபேசி அழைப்பை 41 வயது சிட்டி ஹாஜார் ராம்லியால் நம்ப முடியவில்லை. அவர் அதிர்ஷ்டக் குலுக்கில் இரண்டாம் பரிசை வென்றதை ஷெங் சியோங் அவரிடம் தொலைபேசிவழி கூறியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
நோன்புப் பெருநாள் அதிர்ஷ்டக் குலுக்கில் அவர் இரண்டாம் பரிசை வென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அடையாளம் தெரியாதவரிடமிருந்து அழைப்பு வந்ததால் திருவாட்டி சிட்டி அழைப்பை எடுக்கப் பெரிதும் யோசித்தார். தொலைபேசியில் ஷெங் சியோங் ஊழியர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகும் அவரால் நம்ப முடியவில்லை.
தொலைபேசி அழைப்பு ஷெங் சியோங் தலைமையகத்திலிருந்து வந்தது என்பதைத் தான் உறுதிப்படுத்தியபின் அழைத்தவர் தனது வீட்டு முகவரி, அடையாள அட்டை எண் ஆகியவற்றை உறுதிப்படுத்திய பிறகே சிட்டி நம்பினார். வீட்டில் இருந்தபடி சொந்தத் தொழில் செய்துவரும் இவர், உட்லண்ட்சில் உள்ள ஜங்ஷன் 10ல் இருக்கும் ஷெங் சியோங் கிளையிலிருந்து அடிக்கடி சமையல் பொருள்களை வாங்குவதுண்டு.
ஷெங் சியோங்கின் இந்த அதிர்ஷ்டக் குலுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 16 வரை நடந்தது.
முதல் பரிசாக 50,000 வெள்ளி வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு 20,000 வெள்ளி.

