நீதிமன்றம், சிறுவர் இல்லம் என எதுவும் அசைத்துப் பார்க்க முடியாத தன் மனத்தைத் தாயின் கண்ணீர் ஒரே நொடியில் மாற்றியதாகக் கூறினார் இளையர் எலன் (உண்மைப் பெயரன்று).
தீய நண்பர்களின் சகவாசம், போதைப் பழக்கம், சிறு சிறு திருட்டுகள் போன்றவற்றில் ஈடுபட்ட இவர் தற்போது முற்றிலும் மனந்திருந்தி புதிய வாழ்வை அமைத்துக்கொள்ள முயல்கிறார்.
சிறுவர் இல்லத்தில் கடந்த ஆறு மாதங்களில் இவரது முன்னேற்றம், சமூகப் பணி ஈடுபாடு உள்ளிட்டவற்றை அங்கீகரித்து எலனுக்கு தேசிய இளையர் சாதனை விருது மன்றம், வெண்கல விருது வழங்கியுள்ளது.
பள்ளிப் பருவத்தில் தன்னைவிட வயதில் மூத்த நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டதாகச் சொல்லும் இவர், “அவர்கள் செய்த தீய செயல்கள் அந்த வயதில் எனக்கு வியப்பளித்தன. அவற்றை நானும் செய்ய வேண்டும் எனும் தூண்டுதலை ஏற்படுத்தின,” என்றார்.
வயதில் மூத்தோராக இருந்த நண்பர்களும் நல்ல ஆலோசனைகளை வழங்காமல் தீய பழக்கங்களில் ஈடுபடத் தூண்டியதாகவும் அவர் சொன்னார்.
தனது 13வது வயதிலேயே அளவுக்கதிகமான குடிப்பழக்கத்துக்கு ஆளான அவர் பெற்றோர், சகோதரர்களுடன் பெரிதும் நேரம் செலவிடப் பிடிக்காமல் நண்பர்கள் வீட்டிலேயே பெரும்பாலும் தங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
‘விருந்து’களுக்குச் செல்வது, கும்பலாக இணைந்து சண்டையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்ட அவர், தனது 16வது வயதில் விசாரணைக்காக நீதிமன்றம் செல்ல நேரிட்டது.
அது அவரைச் சற்றே கலக்கத்தில் ஆழ்த்தினாலும், மனமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. சிறுவர் இல்லத்தில் சேர்ந்த சில வாரங்களிலேயே வீடு திரும்ப வேண்டும் எனும் எண்ணம் அவருக்கு மேலோங்கத் தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
“அப்போதுகூட நான் பெரிதும் வருத்தம் அடையவில்லை. இல்லத்தில் என்னைப் பார்க்க வந்த முதல் முறை என் தாயார் கதறி அழத் தொடங்கினார். அதுவரை அவருடன் நான் பெரிதாக முகம் கொடுத்துக்கூடப் பேசியதில்லை. எனது நிலை அவருக்கு எவ்வளவு வருத்தம் அளித்தது என்பதை அவரது அழுகை எனக்கு உணர்த்தியது,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் எலன்.
மேலும், “அந்த நொடி, தவறான செயல்களில் ஈடுபட்டுவிட்டோம் எனும் குற்றவுணர்வு எழுந்தது. இனி முற்றிலுமாக மாறி என் தாயரைப் பெருமைப்படுத்துவதென உறுதியாக முடிவெடுத்தேன். அதிலிருந்து இனி பின்வாங்க மாட்டேன்,” என்று உறுதியுடன் கூறினார் அவர்.
தொடர்ந்து குடும்பத்தினர் அவரை நினைத்துக் கவலைப்படுவது குறித்தும் சகோதரர்களின் மனநிலை குறித்தும் தாயார் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டதாகவும் அதனால் குடும்பத்தினருடன் நல்லுறவிலிருக்கும் ஆசை எழுந்ததாகவும் கூறினார்.
ஓராண்டுக்கு மேலாக சிறுவர் இல்லத்தில் இருக்கும் இவர், அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தாயாரிடம் மனம்விட்டுப் பேசுகிறார். அவ்வாறு செய்வது மனத்துக்கு இதமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முதன்முதலில் வெளியில் சென்றுவர வாய்ப்பு கிடைத்தபோது மீண்டும் பழைய நண்பர்களைச் சந்தித்ததாகவும் அது மீண்டும் தீய எண்ணங்களை உருவாக்கியதால் அவற்றை முற்றிலும் தவிர்த்துவிட்டதாகவும் எலன் சொன்னார்.
ஒரு பழக்கத்தைக் கைவிடுவது சிரமமாக இருந்தாலும், எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“ஒருவேளை காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கியோ செல்ல உதவும் ‘டைம் மெஷின்’ கருவி கிடைத்து என்னை நானே சிறுவனாகச் சென்று பார்க்க முடிந்தால், நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடு; நீ வியந்து பார்க்கும் யாரும் சரியானவர்கள் அல்லர்; சிந்தித்துச் செயல்படு என்று சொல்வேன். என்னைப்போல தீயவர்களைக் கதாநாயகர்களாக நினைக்கும் சிறுவர்களுக்கும் எனது அறிவுரை இதுதான்,” என்று தெளிவாகக் குறிப்பிட்டார் எலன்.
சிறு வயதில் யாரையுமே மதிக்காதவர் தற்போது ஒவ்வொருவரையும் மதித்து நடக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
சமையற்கலை வல்லுநராக வேண்டும் எனும் சிறுவயதுக் கனவை நனவாக்கப் போவதாகக் கூறினார்.
“என்னைப்போல மனம் திருந்தி வரும் யாவரையும் சமூகத்தினர் தாங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என விரும்புவார்களோ அவ்வாறே நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விரைவில் வெளிவந்து ஒரு நல்ல வாழ்வை அமைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்,” என்றும் சொன்னார் எலன்.
தேசிய இளையர் சாதனை விருதுகள்
சிங்கப்பூர் சிறுவர் இல்ல இளையர்களின் சேவைக் கற்றல் (Service Leraning), வெளிப்புறப் பணிகளில் ஈடுபாடு (Outdoor appreciation), ஆரோக்கியமான வாழ்வு உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கும் விதமாக இளையர்களுக்கு தேசிய இளையர் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.
சிங்கப்பூர் சிறுவர் இல்லமும் தேசிய இளையர் சாதனை விருதுகள் மன்றமும் இணைந்து ஏப்ரல் 4ஆம் தேதி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
‘பெரிதாகக் கனவு காணுதல், சாதனைகளைக் கொண்டாடுதல்’ (Dreaming Big, Celebrating Achievements) எனும் கருப்பொருளில் இல்ல வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா பங்கேற்றார்.
இந்த இளையர்களின் சாதனைகளையும் அதற்குத் துணைநின்ற ஊழியர்கள், குடும்பம், தொண்டூழியர்கள், சமூகப் பங்காளிகள் என அனைவரையும் விருது அங்கீகரித்துள்ளதாகச் சொன்னார் திரு எரிக் சுவா.
இவ்விழாவின் கருப்பொருள் சிறந்த எதிர்காலத்தைக் குறித்துக் கற்பனை செய்வதற்கான துணிவையும் அதனை நனவாக்கத் தேவையான ஒழுக்கத்தையும் கோடிட்டுக் காட்டுவதாக அவர் சொன்னார்.
இளையர்களின் நன்னெறி, தொழில்முறைக் கற்றல் எனப் பல அம்சங்களிலும் மேம்பட ஏதுவான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் திரு சுவா குறிப்பிட்டார் .
ஆசிரியர்கள், இளையர் வழிகாட்டல் அதிகாரிகள் (Youth Guidance Officers), மனநல வல்லுநர்கள், துணைக் காவல்படை அதிகாரிகள் என அனைவரும் இளையர்களின் மீது வைத்த நம்பிக்கை அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாகவும் அவர் சொன்னார்.
தொடர்ந்து, தேசிய இளையர் சாதனை விருதுகள் மன்றத்தின் 14 வெண்கல விருதுகள், ஐந்து குணநலன் மேம்பாட்டை அங்கீகரிக்கும் விருதுகள், கலை, விளையாட்டு விருதுகள் ஏழு, கல்வியில் சிறப்பான செயல்பாடுகளுக்கான 19 விருதுகளை அவர் வழங்கினார்.