பத்து நாடுகளுக்கு காரில் பயணம் செய்த அன்பு அன்னையர்

2 mins read
Byline: வி. கே. சந்தோஷ் குமார்
1465f189-5f46-41fb-b16b-ddb641684e10
(இடமிருந்து) திருவாட்டி அவந்தி தீட்சித், திருவாட்டி ஊர்மிளா ஜோஷி, திருவாட்டி மாதுரி சஹஸ்ரபூதே மூவரும் சிங்கப்பூரிலுள்ள அன்னையர் சிலரைச் சந்தித்தனர். - படம்: மதர்ஸ் ஆன் வீல்ஸ்

இந்தியாவைச் சேர்ந்த அன்னையர் மூவர், 10 நாடுகளுக்கு காரில் தாங்களாவே பயணம் செய்தனர்.

பூட்டானிலிருந்து மார்ச் 4ஆம் தேதி அவர்களது பயணம் தொடங்கியது. சிங்கப்பூருக்கு மார்ச் 19ஆம் தேதி வந்தடைந்த அம்மூவரும், இங்கு 70 தாயார்களைச் சந்தித்தனர்.

தொடர்ந்து மாறிவரும் தாய்மைக்குரிய பொறுப்புகளை ஆராய்வது திருவாட்டியர் அவந்தி தீட்சித், ஊர்மிளா ஜோஷி, மாதுரி சகஸ்ரபூதே மூவரின் நோக்கம்.

இந்தப் பயணத்திற்காக, டாட்டா ஹேரியர் எஸ்யுவி காரை மூவரும் மாற்றி மாற்றி ஓட்டிச் செல்வதாக அவர்கள் கூறினர்.

தொடக்கத்தில் பங்ளாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகள் வழியாகச் சிங்கப்பூரை அடைய நினைத்த அவர்கள், அவ்விரு நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றநிலையால் பயணத்தடத்தை மாற்ற வேண்டியிருந்தது.

நீண்ட பயணங்களுக்கு அவர்கள் புதியவரல்லர். முதல் பயணமாக 2018ல் அவர்கள் புதுடெல்லியிலிருந்து லண்டன் சென்றனர். பயணத்தின்போது 22 நாடுகளுக்குச் சென்ற அவர்கள், 300க்கும் மேற்பட்ட தாய்மார்களைச் சந்தித்தனர்.

தாய்மைக்குரிய பொறுப்புகளைப் பற்றிய ஆழ்ந்த, பொருள்மிக்க கலந்துரையாடல்களை நிகழ்த்தினர்.

‘உலகைக் குணப்படுத்த வாகனத்தில் செல்லும் அன்னையர்’( Mothers on Wheels Out to Heal the World) என்ற திட்டத்தின்கீழ் அவர்கள் இயங்குகின்றனர்.

‘ஃபவுண்டேஷன் ஃபார் ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட்’ (Foundation for Holistic Development) அறநிறுவனம், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள கோல்ஹாபூரில் தளம்கொண்டுள்ள இந்த அமைப்பு, 18 மாநிலங்களில் செயல்படுகிறது.

‘மாதா சக்தி’ எனப்படும் தாய்மையின் வலிமைக்கு மேலும் வலுச்சேர்ப்பது இந்த இயக்கத்தின் நோக்காகும்.

அறநிறுவனத்தை அமைப்பதற்கான யோசனை காஷ்மீரப் பள்ளத்தாக்கில் உதித்ததாக மாதுரி தெரிவித்தார்.

2016ல் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டு மாதுரி, சிறார்களைப் பள்ளிக்குச் செல்ல ஊக்குவிக்கும் பொருட்டு கிராமங்களுக்குச் செல்கிறார்.

காஷ்மீரத்திற்கு வெளியில் வசிக்கும் 3,000 இளையர்களுக்கு உயர்கல்வி பயில இவரது அறப்பணி வகைசெய்தது.

“தாய்மைக்குரிய பரிவுடன் இந்தக் குடும்பங்களை அணுகினேன். தாய்மையின் தாக்கம் மகத்துவமானது எனக் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் மார்ச் 19ஆம் தேதி அவர்கள் சந்தித்த அன்னையரில் 50 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள்.

மேலும், விவேகானந்தா சேவா சங்கத்தினரையும் வெளிநாட்டுக் குடும்பப் பள்ளி (Overseas Family School) மாணவர்களின் பெற்றோரையும் அவர்கள் சந்தித்தனர்.

குறைந்துவரும் திருமண விகிதம், அதிகரிக்கும் மணவிலக்கு, ஒற்றைத் தாய்மாரின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தற்காலச் சவாலாக இந்தக் குழுவினர் கண்டறிந்தனர்.

ஒவ்வொரு நாட்டிலும் சந்திக்கும் அன்னையர் சிலரிடம் கேள்வி கேட்டு பதில்களை அவர்கள் சேகரித்துத் தொகுக்கவுள்ளனர்.

அவர்களது தகவல் திரட்டு ஆராயப்பட்டு, பிறகு இந்தியாவில் இந்த ஆண்டுப் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் அன்னையர்க்கான அனைத்துல மாநாட்டில் படைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்