சிலேத்தார் விரைவுச்சாலையில் மோட்டர்சைக்கிளோட்டி ஒருவர்,தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அவர், சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை சறுக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது.
வியாழக்கிழமை (டிசம்பர் 5ஆம் தேதி) நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அன்று காலை 7.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
புக்கிட் தீமா விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
சாலையில் சறுக்கிய அந்த 21 வயது மோட்டர்சைக்கிளோட்டியை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது சுயநினைவுடன் இருந்ததாகச் சிங்கப்பூர் காவல் படையும் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
மோட்டர்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விரைவுச்சாலையின் அருகே இருக்கும் புல் தரையில் படுத்திருப்பதையும் அவருக்கு அருகே விரைவுச்சாலையில் மோட்டர்சைக்கிள் ஒன்று விழுந்து கிடப்பதையும் ‘Singapore Roads accident.com’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட காணொளியில் காண முடிந்தது.
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

