விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் மரணம்: 68 வயது கார் ஓட்டுநர் கைது

விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் மரணம்: 68 வயது கார் ஓட்டுநர் கைது

படம்: ROADS.SG/FACEBOOK

02 Apr 2026 - 10:49 am

1 mins read

மத்திய விரைவுச்சாலையில் (CTE) நிகழ்ந்த விபத்து ஒன்றில் 64 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

அந்த விபத்து தொடர்பில், மரணம் ஏற்படுத்தும் விதத்தில் அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக 68 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (ஏப்ரல் 1) நிகழ்ந்த அந்த விபத்து தொடர்பாகப் பிற்பகல் 2.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் கூறின.

காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து, மத்திய விரைவுச் சாலையில் ஆர்ச்சர்ட் ரோடு வெளிவழி அருகே ஆயர் ராஜா விரைவுச் சாலையை நோக்கிய பாதையில் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநரும் பின்னிருக்கைப் பெண் பயணியும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஓட்டுநர் உயிரிழந்துவிட்டார்.

விபத்து நிகழ்ந்த விதம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

ஆர்ச்சர்ட் ரோடு வெளிவழி அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அந்த வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண்ணும் விரைவுச்சாலையில் விழுந்து கிடந்ததைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்துமரணம்விசாரணை