ஈசூன் வட்டாரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தை அடுத்து கார் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
ஈசூன் அவென்யூ 7க்கும் செம்பவாங் ரோட்டிற்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் பின்னிரவு 2.20 மணியளவில் காரும் மோட்டார்சைக்கிளும் விபத்துக்குள்ளானது குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திலிருந்து கார் ஓட்டுநரும் மோட்டார்சைக்கிளோட்டியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அதையடுத்து மோட்டார்சைக்கிள் ஓட்டிய 56 வயது ஆடவர் மருத்துவமனையில் பின் மாண்டார். சம்பவம் தொடர்பில் 31 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட பிறகு வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் ஆடவரின் காரிலிருந்து மின்சிகரெட்டையும் அது தொடர்பான கருவியையும் பறிமுதல் செய்தனர்.
மின்சிகரெட் விவகாரத்தை அதிகாரிகள் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். விசாரணை தொடர்கிறது.

