ஈஸ்ட் கோஸ்ட் பார்க் சர்வீஸ் ரோட்டில் சென்ற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 20 வயது மோட்டார்சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த ஆடவரின் சாகசத்தைக் காட்டும் காணொளி டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவர் நடைபாதையின் மீதேறி, ஒரு பேருந்து நிறுத்தத்தைக் கடந்து செல்வது அக்காணொளியில் தெரிகிறது. போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு அவர்கள் செல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளதாக ‘ஏஷியாஒன்’ இணையத்தளம் கூறியது.
அந்தப் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கார் நிறுத்துமிடம் ஒன்றில் மோட்டார்சைக்கிளோட்டிகள் சிலர் குழுமியிருந்ததைக் கண்டதாகப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டதாக ‘ஏஷியாஒன்’ தெரிவித்தது.
அதிகாரிகள் அக்குழுவினரிடம் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த 20 வயது ஆடவர் அந்த இடத்தில் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதையடுத்து அவர் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதற்காக முதன்முறை பிடிபடுவோருக்கு 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையுடன் $5,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.