காவல்துறை சோதனைக்கு ஒத்துழைக்காத மோட்டார்சைக்கிளோட்டி கைது

காவல்துறை சோதனைக்கு ஒத்துழைக்காத மோட்டார்சைக்கிளோட்டி கைது

1 mins read
வாகனத்தை நிறுத்தவில்லை; பின்னர் தப்பியோட முயன்றார்
ca349e39-9a4b-4f3f-913f-c1ea3a9b600e
மோட்டார்சைக்கிளை ஓட்டிய 23 வயது ஆடவர் காவல்துறை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தச் சொன்னபோது வேகத்தை அதிகரித்துச் சென்றார். பின்னர் வாகனம் சறுக்கியதை அடுத்து தப்பியோட முயன்றார். - காணொளிப் படம்: எஸ்ஜி ரோடு விஜிலான்டே/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

காவல்துறையினர் சோதனையிடுவதற்கு நிறுத்தச் சொன்னபோது நில்லாமல் வேகமெடுத்துச் சென்றதுடன் பின்னர் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பியோட முயன்றதாகக் கூறப்படும் மோட்டார்சைக்கிளோட்டியும் அவருடன் பின்னிருக்கையில் இருந்த பயணியும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிளை ஓட்டிய ஆடவருக்கு வயது 23. ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஓல்டு சுவா சூ காங் ரோட்டில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி அந்த ஆடவரை வாகனத்தை நிறுத்தும்படி கூறினார்.

ஆனால், அந்த ஆடவர் நிறுத்த மறுத்து மோட்டார்சைக்கிளின் வேகத்தை அதிகரித்துச் சென்றதாகக் காவல்துறை திங்கட்கிழமை தெரிவித்தது.

அதையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றனர். சம்பவத்தின்போது புக்கிட் பாத்தோக் ரோட்டை நோக்கிச்செல்லும் சுவா சூ காங் ரோட்டில் ஆடவரின் மோட்டார்சைக்கிள் சறுக்கியது.

அதிகாரிகள் அவரை நெருங்கியபோது அங்கிருந்து அவர் தப்பியோடினார். பின்னர் அதிகாரிகளிடம் பிடிபட்டார். அந்த ஆடவர் சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

பின்னர், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது, உரிமமின்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றச்செயல்களின் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் உதவிவருவதாகக் கூறப்பட்டது.

ஆடவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற 22 வயதுப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு அல்லது மோசடி மூலம் பெறப்பட்ட சொத்தை வைத்திருந்தது தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மோட்டார்சைக்கிள்ஆடவர்கைதுகாவல்துறைசோதனைஒத்துழைப்பு