ஆயர் ராஜா விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட விபத்தில் 58 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
மரினா கரையோர விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில், கெப்பல் சாலை நுழைவுக்குப் பிறகு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் பிற்பகல் 3 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதைக் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
லாரி ஓட்டுநரான 37 வயது ஆடவர் ஒருவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.
இணையவாசி ஒருவர், இந்த விபத்து குறித்த காணொளியையும் புகைப்படங்களையும் Singapore roads accident.com ஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்தார்.
விரைவுச்சாலையின் இடதுபுறத்தில் ஒரு மோட்டார்சைக்கிள் தரையில் கிடப்பதை ஒரு புகைப்படம் காட்டியது. அதற்கு அருகே நீல நிற காவல்துறை கூடாரம் போடப்பட்டிருந்தது.
அங்கு ஒரு லாரியும் அதற்குப் பின்னால் ஒரு இழுவை வாகனமும் இருந்தன.
இரண்டு காவல்துறை கார்கள், ஒரு காவல்துறை வேன், போக்குவரத்துக் காவல்துறை மோட்டார்சைக்கிள்கள் அருகில் காணப்பட்டன. வேறு சில வாகனங்களும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
விபத்து குறித்த விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.

