புக்கிட் தீமாவில் உள்ள எங்நியோ அவென்யூவில் நடந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார். தீவு விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் எங்நியோ அவென்யூவில் லாரி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்து பற்றிய தகவல், வியாழக்கிழமை (அக்டோபர் 9) காலை 10.30 மணியளவில் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் அந்த 29 வயது மோட்டார் சைக்கிளோட்டி விபத்து நடந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டதாக உறுதிசெய்தனர். லாரி ஓட்டுநரான 49 வயது ஆடவர் விசாரணையில் உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்தில் வெளிவந்த படங்களில், சாலைத் தடுப்புமீது கால்வைத்த நிலையில் ஆடவர் விழுந்து கிடப்பதும், ஒரு மோட்டார் சைக்கிள் சாலையின் இடதுபுறத்தில் சாய்ந்து கிடப்பதும் காணப்பட்டன.