புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Aug 2026 - 12:43 pm

1 mins read

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) உயிரிழந்தார்.

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து காலை 11.30 மணியளவில் தகவல் கிடைத்ததைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

அந்த விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டிருந்தனர்.

அதில் 32 வயது ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட 45 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் சம்பந்தப்பட்டோரில் ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் மற்றொருவர் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் கிட்டத்தட்ட 54.8 விழுக்காட்டு விபத்துகள் மோட்டார்சைக்கிளோட்டிகளையும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து சென்றோரையும் உள்ளடக்கியது.

சாலை விபத்துகளில் ஏற்பட்ட மரணங்களில் கிட்டத்தட்ட 53 விழுக்காட்டு மரணங்கள் மோட்டார்சைக்கிளோட்டிகளையும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து சென்றோரையும் உள்ளடக்கியிருந்தது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வாகன எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு மட்டுமே.

மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளும் 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு அதிகரித்தது.

2024ஆம் ஆண்டு 3,973 சம்பவங்கள் மோட்டார்சைக்கிளோட்டிகள் தொடர்புடையவை. கடந்த ஆண்டு அது 4,227ஆக அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்