மத்திய விரைவுச்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 71 வயது மோட்டர்சைக்கிளோட்டி உயிரிழந்தார். கவனக்குறைவாக வாகனமோட்டி மரணம் விளைவித்ததற்காக மோட்டர்சைக்கிள்மீது மோதிய டாக்சியை ஓட்டிய 67 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) காலை 4.15 மணியளவில் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் அங் மோ கியோ அவென்யூ 1க்கு இட்டுசெல்லும் சாலையில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ஆடவர் ஒருவரின் மரணத்தை உறுதிசெய்தனர்.
காலை 6 மணியளவில் விபத்து தொடர்பான காணொளி இணையத்தில் பரவத்தொடங்கியது. அதில் சாலையில் இடது புறத்தில் நீல நிறக் கூடாரம் போடப்பட்டிருப்பதையும் சுமார் 25 மீட்டர் தூரத்தில் டாக்சி நிற்பதையும் காண முடிகிறது. மஞ்சள் நிற டாக்சியின் முன்புறத்தில் மோட்டார்சைக்கிள் சிக்கியிருப்பதைக் காண முடிந்தது.
மோட்டார்சைக்கிள் விபத்துகள் தொடர்பான மரணங்கள் கூடியுள்ளன. 2023ஆம் ஆண்டு 68ஆக இருந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 85ஆகக் கூடியது.

